ச. மோகன் உலக நாகரிகப் படிநிலைகளில் 1876 ஆம் ஆண்டு தொல்லியல் அகழாய்வு நடந்த 'ஆதிச்சநல்லூர் பரும்பு' இருக்கும் புளியங்குளம் கிராமம் தான் "வாழை" திரைக் காவியத்தின் கதைக்களம். "வாழை" பற்றிய விமர்சனங்கள் ஏற்கெனவே நீண்டு கொண்டிருக்கும் வேளையில் இக்கட்டுரை துயரம் படர்ந்த கோர விபத்து ஏற்படுத்திய மீளா துயரின் பகிர்தலாகும். உயிரிழந்தோர்க்குப் படையல் ஆகும். புளியங்குளம் கிராமம் : தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வற்றாத தாமிரபரணி ஆற்றின் கரையில் புளியங்குளம் கிராமம் அமைந்துள்ளது. தமிழர் நிலத்திணைகளில் ஒன்றான மருத நிலத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் நெல்லும் வாழையும் விளைகின்றன. இங்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மட்டும் வாழ்கின்றனர். சுற்றுப்புறக் கிராமங்களில் நிலவிய சாதி ஆதிக்கத்திற்குச் சாவு மணி அடித்து "வீரம் விளைந்த மண்" என்ற புகழுக்குரியது புளியங்குளம் கிராமம் என்றால் மிகையன்று. வாழைத் தார்: நெல்லும் வாழையும் இவர்களது பயிர்த் தொழில். இதுவே இவர்களது வாழ்வாதாரம். பெரும்பாலும் புரட்டாசி மாதம் முதல் சித்திரை மாதம் வரை வாழைத்த...