Skip to main content

நவரச நாயகனின் "அரிச்சந்திரா": ஆகோஷ் டீமின் மேஜிக்கல் மியூசிக்!

 சில நாயகர்களைத் திரையில் பார்க்கும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அப்படியொரு நாயகனாக அன்றும் இன்றும் நம் மனதில் நிற்பவர் நடிகர் கார்த்திக். அவர் நடித்த படங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற முடியும்.

அவரது முதல் படமான ‘அலைகள் ஓய்வதில்லை’, கௌரவ வேடத்தில் தலைகாட்டுவதற்கும் ‘தனிக்கெத்து’ வேண்டும் என்று உணர வைத்த ‘மௌனராகம்’, அவரை மீண்டும் திரையுலகின் முன்னணி நடிகராக மாற்றிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ உட்படப் பல படங்களை அதற்கான உதாரணங்களாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இடம்பெறக் கூடியது ‘அரிச்சந்திரா’.

செய்யாறு ரவி இயக்கிய இப்படத்தில் மீனா, பிரியா ராமன், சின்னி ஜெயந்த், விவேக், வையாபுரி, டெல்லிகணேஷ், சத்யபிரியா, ஆனந்த், தலைவாசல் விஜய், ஜனகராஜ் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. ஆகோஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர்.

மிகச்சிறிய கதை!

எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் இயல்பு கொண்டவர் அரிச்சந்திரா (கார்த்திக்). தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதே அதற்குப் பின்னிருக்கும் காரணம். அதுவே, அவர் மீது அவப்பெயர் உருவாகவும் காரணமாகிறது.

ஒருநாள் நந்தினி (மீனா) எனும் பெண்ணைப் பார்க்கிறார் அரிச்சந்திரா. முதல் பார்வையிலேயே அவர் மீது காதலில் விழுகிறார். அப்பெண்ணுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை அறிந்து, அதேபோலத் தான் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.

ஒருகட்டத்தில் அரிச்சந்திராவின் தகிடுதத்தங்களுக்குப் பலன் கிடைக்கிறது; நந்தினி அரியைக் காதலிக்கத் தொடங்குகிறார். அதன்பிறகு மெல்ல அரிச்சந்திராவின் பொய் பேசும் குணம் அவருக்குத் தெரிய வருகிறது. அதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல் நிகழ்கிறது.

ஒருகட்டத்தில் அது நிரந்தரப் பிரிவில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அதையும் தனது பொய் சொல்லும் குணத்தாலேயே சரி செய்ய முயற்சிக்கிறார் அரிச்சந்திரா. அதன்பிறகு என்னவானது என்பதைச் சொல்லும் இப்படத்தின் மீதி.

ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதும் அளவுக்கு மிகச்சிறிய கதையைக் கொண்டது ’அரிச்சந்திரா’. உண்மையின் அடையாளமாக அரிச்சந்திரனை மக்கள் நினைப்பதற்கு மாறாக, அந்தப் பெயருடைய ஒரு மனிதன் எடுத்ததற்கெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடுவதுதான் இக்கதையின் யுஎஸ்பி. அதனை ரசிகர்கள் ரசித்துக் குதூகலிப்பதற்கு ஏற்ப, தேனில் நழுவியோடும் பலாச்சுளை போல இதன் திரைக்கதை அமைந்திருந்தது.

வண்ணமயமான காட்சியாக்கம்!

ஒரு நகைச்சுவைப் படத்திற்கு என்னென்ன தேவையோ, அவையெல்லாம் ‘அரிச்சந்திரா’வில் உண்டு. வினோதமான நாயக பாத்திரம், அதற்கு நேரெதிரான நாயகி, இருவருக்குள்ளும் முளைக்கும் காதல், அதன்பிறகு ஏற்படும் முரண்கள், அவற்றின் விளைவுகள் என்று இதன் திரைக்கதை நகரும்.

கே.ஜீவகுமாரன் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருந்தார். திரைக்கதை ஆக்கத்தில் இயக்குனர் செய்யாறு ரவியும் தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனும் தங்களது பங்களிப்பைத் தந்திருந்தனர். நாயகனின் குணாதிசயங்கள், வேலை, குடும்பம், நண்பர்கள் என்று அவரது பின்னணியை ஒவ்வொன்றாக நமக்கு உணர்த்தும் இதன் ஆரம்பகட்டக் காட்சிகள். அதனை அழகியல் உணர்வுடன் திரையில் சொல்வதற்கு உகந்த வகையில்,  நாயகன் கார்த்திக்கை இப்படத்தில் ஒரு விளம்பரப்பட இயக்குனராகக் காட்டியிருந்தார் செய்யாறு ரவி.

அந்த சித்தரிப்பு, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் வண்ணமயமான காட்சியாக்கத்தை உருவாக்க வழி வகுத்தது.
மோகன் - ராஜேந்திரன், ரமேஷ் யந்த்ரா ஆகியோர் இதன் கலை வடிவமைப்பைக் கையாண்டிருந்தனர். படம் முழுக்க ‘ப்ரெஷ்ஷான’ உணர்வை நாம் அனுபவிக்க, இவர்களது கலையாக்கமும் ஒரு காரணம். இவர்களில் ரமேஷ் யந்த்ரா, தற்போது ‘குடியம் குகைகள்’, ‘டேனிஷ் துறைமுகம்’ என்ற குறும்படங்களின் இயக்குனராகவும், வெற்றிகரமான விளம்பரப்பட இயக்குனராகவும் அறியப்படுகிறார்.

சின்னி ஜெயந்த், விவேக், வையாபுரி என்று நடிகர் பட்டாளம் இதில் நாயகன் கார்த்திக்கோடு திரியும். அவர்கள் அடிக்கும் ஒன்லைனர்கள், சோகமான காட்சியிலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். வினு சக்ரவர்த்தி, டி.எஸ்.ராகவேந்தர், தியாகு, ஜனகராஜ் போன்றவர்களை சீரியசான பாத்திரங்களில் காண்பித்து, பிறகு அவர்களையும் காமெடி ரூட்டுக்கு மாற்றியிருக்கும் இதன் திரைக்கதை.

படத்தொகுப்பை அனில் மல்நாட் கனகச்சிதமாகக் கையாண்ட காரணத்தால், திரையில் கதையின் போக்கு சீராக நகரும். நாயகி மீனாவின் அழகை ரசிகர்கள் ஆராதிக்கும் வகையில் ‘முந்தானைச் சேலை முட்டுதான் ஆளை..’ பாடல் இதிலுண்டு. அது சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது. இன்னொரு நாயகியாகப் பிரியா ராமன் வேறு இடம்பெற்றிருந்தார்.

தொடக்கம் முதல் இறுதி வரை போரடிக்காத வகையில், நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமைந்தது ‘அரிச்சந்திரா’. ‘உள்ளத்தை அள்ளித்தா’ பாணியில் இப்படமும் கலகலப்பான மனநிலையை ரசிகர்களிடத்தில் உருவாக்கியது. அதற்குப் பாடல்களும் பின்னணி இசையும் பக்கபலமாக இருந்தன.

ஆகோஷின் மாயாஜாலம்!

தொண்ணூறுகள் முதல் 2000 வரை இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களைத் தொகுத்தால், அவற்றுள் ஒன்றாக இடம்பெறும் இதிலுள்ள ’நாடோடி பாட்டுப் பாட’ பாடல். மனதை மயக்கும் மெலடி மெட்டாக அது இருக்கும்.

’முந்தானை சேலை’ பாடல் குதூகலப்படுத்தும் காதல் டூயட் ஆக இருக்கும். ‘என்ன இது கனவா’ நம்மைக் கனவுலகுக்கு அழைத்துச் சென்று காதல் மழையில் நனைய வைக்கும். பழைய படங்களில் வரும் கிளப் டான்ஸ் போல, இதில் டிஸ்கொதே பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் ’வானம் என்பது’ பாடல். அதனைக் கேட்டவுடன், கிரேக்கத்து அழகிகளின் உலகத்துக்குள் நுழைந்துவிட்டோமோ என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்க வைக்கும்.

அனைத்தையும் முன்கூட்டியே நாம் உணரும் வகையில், டைட்டில் காட்சியில் ‘அரிச்சந்திரன் வர்றான்’ பாடல் அமைக்கப்பட்டிருக்கும். அதன் துள்ளல் இசையே, இப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்டை ரத்தினச்சுருக்கமாக உணர்த்தும்.

மேலும் ரொமான்ஸ், காமெடி, த்ரில் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கேற்பச் சுவையான பின்னணி இசையையும் தந்திருந்தனர் ஆகோஷ். ஆம், இப்படத்திற்கு ஆகோஷ் என்ற பெயரில் ஆனந்த், கோபால் ராவ், ஷாலீன் என்று மூவர் இசையமைத்தனர். அவர்களது பெயர்களின் முதலெழுத்தே ‘ஆகோஷ்’.

இசையமைப்பாளர்கள் ஆகோஷ் தந்த முதல் படமே ஹிட் எனும் அளவுக்கு அமைந்தது ‘அரிச்சந்திரா’வின் இசை. அதன் தொடர்ச்சியாக, கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், அவரது மகன் எபி, சிம்ரன், கரீஷ்மா கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில், நந்தகுமார் இயக்கிய ‘கோடீஸ்வரன்’ படத்திற்கு மூவரும் இசையமைத்தனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற ‘தொலைவினிலே வானம்’ பாடல் இன்று வரை மெலடி பிரியர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்றாக உள்ளது. போலவே ‘அல்வா பாப்பா’, ‘நான் மேல்நாட்டு கிளியோபாட்ரா’, ‘தாம் தரிகிட தோம்’, ’அடி கண்ணே’ பாடல்கள் துள்ளல் இசையில் வெவ்வேறு சிகரங்களைத் தொட்டிருக்கும். சில காரணங்களால் அப்படம் வெளியாகாத காரணத்தால், தமிழில் ஆகோஷ் வேறு படங்களுக்கு இசையமைக்கவில்லை.

 

இந்தியில் சன்னி தியோல் நடித்த ‘ஸோர்’ படத்திற்கு இவர்கள் இசையமைத்தனர். 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை ஒட்டி, ‘ஓ யாரா ரே’ பாடலைத் தந்தனர். ‘பைசா’ என்ற பெயரில் இசை ஆல்பமொன்றையும் வெளியிட்டனர். ஆனால், அதன்பிறகு மூவருமே வெவ்வேறு வழிகளில் சென்றதனால் ‘ஆகோஷ்’ மாயாஜாலமும் பாதியிலேயே நின்றுபோனது. இந்தியத் திரையுலகில் இன்னொரு சங்கர் - இஷான் - லாய் ஆக மாறியிருக்க வேண்டியவர்கள், இன்று இணையத் தேடலில் கூட அகப்படாமல் இருக்கின்றனர்.

[caption id="attachment_531754" align="alignnone" width="411"] செய்யாறு ரவி[/caption]

பிரபு நடித்த ‘தர்மசீலன்’ படத்தின் வழியே அறிமுகமானார் இயக்குனர் செய்யாறு ரவி. ‘அரிச்சந்திரா’ வெற்றிக்குப் பிறகு அவர் தமிழில் படம் இயக்கப் பல முறை முயன்றார். ஆனால், அம்முயற்சிகள் கரையைத் தொடவில்லை.
அதேநேரத்தில் கோபுரம், வரம், பணம், ஆனந்தம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடர்களைத் தொலைக்காட்சிக்காக இயக்கினார். 2017ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார்.

பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்ற திரைப்படங்கள் மட்டுமே என்றென்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படும். சுமாரான மற்றும் நல்லதொரு வெற்றியைப் பெற்றவை மிகச்சிலரது நினைவலைகளில் மட்டுமே தங்கியிருக்கும்.
அந்த வகையில், சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், செய்யாறு ரவி இயக்கத்தில், ஆகோஷ் இசையமைப்பில் உருவான படம் என்பதே இன்றுவரை ‘அரிச்சந்திரா’வின் அடையாளமாக உள்ளது. இப்படத்தை ஒருமுறை கண்டால் போதும்;  இதில் நடித்த அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் நம் நெஞ்சோடு ஒட்டிக்கொள்ளும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்: 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

உபா வழக்கு: நியூஸ் கிளிக் நிறுவனர் விடுதலை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்