Skip to main content

7G: விமர்சனம்!

 உதயசங்கரன் பாடகலிங்கம்

டைட்டில் ரசிகர்களை ஈர்க்கும்!

சில படங்களின் டைட்டிலே நம் கவனத்தை ஈர்க்கும். சில டைட்டில்கள் ஏற்கனவே வந்த படங்களை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் நம் கவனத்தைக் கவர்வதாக அமைந்தது ‘7ஜி’. செல்வராகவன் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’யில் நாயகியாக வந்த சோனியா அகர்வால் இதிலும் நடித்துள்ளார். அது, இதன் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது.

ஹாரூண் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படத்தில் ரோஷன் பஷீர், ஸ்மிருதி வெங்கட், கல்கி ராஜா, சுப்பிரமணிய சிவா, சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அமானுஷ்யம் நிறைந்த வீடு!

7G Movie 2024 Review

ராஜிவ் (ரோஷன் மேத்யூ) - வர்ஷா (ஸ்மிருதி வெங்கட்) ஜோடிக்கு ஐந்து வயதில் ஒரு மகன். அதுவரை வாடகை வீட்டில் வசித்தவர்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டுமென்பது பெருங்கனவு. அவர்கள் விரும்பியவாறு, மூவரும் புதிதாக ஒரு குடியிருப்புக்கு இடம்பெயர்கின்றனர். அங்கிருக்கும் ‘7ஜி’ பிளாட்டை அவர்கள் வாங்கியிருக்கின்றனர்.

அந்த வீட்டில் குடியேறிய முதல் நாள், தங்களது நட்பு வட்டத்தில் இருப்பவர்களை அழைத்து ராஜிவ், வர்ஷா தம்பதியர் விருந்து கொடுக்கின்றனர். அதில் ராஜிவ்வின் முன்னாள் காதலி நிஷாவும் (சினேகா குப்தா) கலந்துகொள்கிறார்.

ராஜிவ் உடன் வாழ முடியாத ஏக்கத்தில் இருக்கும் நிஷா, பில்லிசூன்யம் மூலமாக அவரைத் தன்வசப்படுத்த முயற்சிக்கிறார். அதனைச் செய்யும் பொருட்டு, ராஜிவ்வின் மகனைத் தனியே வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். அவரது தலையில் எதையோ தடவிவிட்டு, சில மந்திரங்களை உச்சரிக்கிறார்.

ஒரு அறையில் இருக்கும் அலமாரியில் அந்தச் சடங்குகளைச் செய்த பொம்மையை மறைத்து வைக்கிறார். தற்செயலாக வீட்டுக்குள் நுழையும் வர்ஷா, நிஷா அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார். ஆனால், அடுத்த நொடியே அதனை மறந்துவிடுகிறார்.

அடுத்த சில நாட்கள் வழக்கம் போல நகர்கின்றன. ராஜிவ்வுக்கு வேலையில் பதவி உயர்வு வர, பயிற்சிக்காக அவர் பெங்களூரு செல்ல நேர்கிறது.

அப்போது வீட்டில் வர்ஷாவும் அவரது மகனும் மட்டுமே இருக்கின்றனர். அந்த நேரத்தில், தனது வீட்டில் சில சடங்குகளைச் செய்யத் தொடங்குகிறார் நிஷா.

இன்னொருபுறம், 7ஜி வீட்டில் வினோதமாகச் சில அனுபவங்களை எதிர்கொள்கிறார் வர்ஷா. அதையடுத்து, அவரது மனதுக்குள் பயம் பூதாகரமாகிறது.

ராஜிவ்விடம் விஷயத்தைச் சொல்லவா, வேண்டாமா என்று யோசிக்கும் வர்ஷா, இறுதியாகத் தானே அதனைச் சமாளித்துக் கொள்வது என்று முடிவு செய்கிறார். அடுத்த நாள், அலுவலகத்தில் தன்னுடன் வேலை செய்த தோழி ரியாவை அழைத்து விஷயத்தைச் சொல்கிறார்.

அதைக் கேட்டதும், பகபகவென்று சிரித்துக் கிண்டலடிக்கிறார் ரிஷா. அவரிடம், அன்று இரவு வீட்டில் தங்களுடன் தங்குமாறு சொல்கிறார் வர்ஷா. ரியாவும் அவ்வாறே செய்கிறார்.

திடீரென்று நள்ளிரவில் வர்ஷாவின் மொபைல் ஒலிக்கிறது. எதிர்முனையில் பேசுகிறார் ரியா. கட்டிலில் ஒன்றாகப் படுத்திருந்தவர் எங்கு போனார் என்று வர்ஷா யோசிக்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக நடந்ததைச் சொல்கிறார் ரியா.

கட்டிலில் படுத்திருந்த தான் நள்ளிரவில் கண் விழித்தபோது மொட்டை மாடியில் கிடந்ததாகச் சொல்கிறார். ஒரு உருவம் தன்னைத் துரத்தியடித்ததாகக் கூறுகிறார். 7ஜியில் வசிப்பது பாதுகாப்பானது அல்ல என்று வர்ஷாவிடம் வலியுறுத்துகிறார்.

அதற்கடுத்த நாள், ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த பிளாட்டின் வாசலில் இருக்கும் ’மஞ்சுளா ஹவுஸ்’ எனும் பலகையைப் பெயர்த்தெடுக்க முயற்சிக்கிறார் வர்ஷா. அந்த முயற்சி தோல்வியடைந்ததும், பைத்தியம் பிடித்தது போலக் கத்துகிறார்.

அந்த தளத்தின் இன்னொரு பிளாட்டில் வசிக்கும் ஒரு தம்பதி, ’என்ன விஷயம்’ என்று கேட்கின்றனர். அவர்களுக்குப் பதிலளிக்காமல்  வீட்டுக்குள் செல்கிறார் வர்ஷா. அடுத்த சில நொடிகளில் அவர் அலறும் சத்தம் கேட்கிறது.

ஏற்கனவே வர்ஷாவுக்கு அறிமுகமான அந்த தம்பதி, வர்ஷாவின் வீட்டுக்குள் நுழைகின்றனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வர்ஷாவைப் பார்த்து கலங்கும் இருவரும், ’மஞ்சு அந்தப் பொண்ணை விட்டுடு’ என்கின்றனர்.

அந்தக் கணத்தில், அந்த இடத்தில் மஞ்சுளா (சோனியா அகர்வால்) என்ற பெண் தனது மகனுடன் தோன்றுகிறார். அந்த வீட்டில் வசித்த மஞ்சுளாவும் அவரது மகனும் எப்படி அகாலமாக மரணமடைந்தனர் என்ற விஷயம், அப்போது அவர்களுக்குத் தெரிய வருகிறது.

அதன்பிறகு என்னவானது என்பதோடு ‘7ஜி’ முடிவடைகிறது. இந்தப் படத்தில் வரும் 7ஜி வீடு அமானுஷ்யம் நிறைந்தது என்பதைக் காட்டச் சில காட்சிகள் வருகின்றன. அவை நிச்சயம் நம்மைப் பயமுறுத்தும். ஆனால், அதற்கு முன் பின்னிருக்கும் சில காட்சிகள் அந்தத் தரத்தில் இல்லை. அதுவே இப்படத்திற்கான சரியான விமர்சனம்.

சிரிக்கக் கூடாது!

7G Movie 2024 Review

‘த்ருஷ்யம்’ படத்தில் வில்லனாக வந்த ரோஷன் பஷீர் இதில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வருகிறார் ஸ்மிருதி வெங்கட். ஸ்மிருதி படம் முழுக்க வரும் அளவுக்கு, ரோஷனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பெரிதாக ஈர்ப்போ, வெறுப்போ உருவாகாத அளவுக்கு அவர்களது நடிப்பு அமைந்துள்ளது.

இரண்டாம் பாதியில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறார் சோனியா  அகர்வால். அவர் வரும் காட்சிகள், வழக்கமாக பேய் படங்களில் நாம் பார்க்கும் பிளாஷ்பேக்குகளை நினைவூட்டுகின்றன.

சித்தார்த் விபின் இதில் ராகேஷ் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் படங்களில் வருவது போல காமெடியாக வசனம் பேசும் காட்சிகளில் அவர் கலக்கியிருக்கிறார். ஆனால், சீரியசான காட்சிகளில் அவர் பேசுமிடங்களும் கூடச் சிரிப்பை வரவழைப்பது இப்படத்தின் முக்கியப் பலவீனம்.

முன்பாதியில் வில்லியாகத் தோற்றம் தரும் சினேகா குப்தா, பின்பாதியில் ஒரு பாடலுக்கு ரோஷன் பஷீர் உடன் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். அவரது ரசிகர்களை அப்பாடல் திருப்திப்படுத்தும்.

’மகாராஜா’வில் திருடனாக வந்த கல்கி ராஜா, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, அவரது மனைவியாக நடித்தவர் உள்ளிட்ட சிலர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர். அவர்கள் வரும் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் கண்ணா, படத்தொகுப்பாளர் பிஜு டான்பாஸ்கோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் திரையில் கொஞ்சமாய் மிரட்சியை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹாரூண். அதனைப் படம் முழுவதும் பரவச் செய்வதற்கான வாய்ப்புகளை சில ‘க்ளிஷே’க்களுக்காக தவறவிட்டிருக்கிறார்.

பின்பாதியில் ‘ஹாரர்’ படங்களுக்கே உரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அவை எண்பதுகளில் வந்த படங்களை நினைவூட்டுவதாக உள்ளன. ‘ம்ம்.. சிரிக்கக் கூடாது’ என்று கட்டாயப்படுத்தினாலும் கூடச் சிரித்துவிடும் அளவில் இருப்பது திரைக்கதையை மேலும் பலவீனப்படுத்துகிறது.

கொஞ்சம் கவனித்திருக்கலாம்!

7G Movie 2024 Review

’சுமார்’ எனும் அளவுகோலைத் தாண்டிய காட்சியாக்கமும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பும் ‘7ஜி’யில் இருக்கின்றன. ஆனாலும், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போக இயக்குனர் சில விஷயங்களைச் செய்யத் தவறியதே காரணம்.

செக்யூரிட்டி பாத்திரத்தில் நடித்த கல்கி ராஜா, கதைப்படி 7ஜியில் வசிக்கும் ஸ்மிருதி வெங்கட் மற்றும் அவரது மகனுடன் பழக முயற்சிப்பதாகக் காட்சியொன்று வரும். ஆனால், அதற்கடுத்த இரண்டொரு காட்சிகளிலேயே அவர்களைக் கண்டால் அவர் ‘ஜெர்க்’ ஆவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

எதனால் அவர் அப்படி ஆகிறார் என்பதற்கான விளக்கத்தைத் தந்திருந்தால் பின்பாதியில் வரும் சில விஷயங்கள் ‘ஜஸ்டிபை’ ஆகியிருக்கும்.

சுப்பிரமணிய சிவா மற்றும் அவரது மனைவியாக வருபவரையும் சரியான வகையில் திரையில் அடையாளப்படுத்தவில்லை. அதனால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘வந்தோம்.. போனோம்..’ என்றளவில் இருக்கின்றன.

நாயகன், நாயகி இருவருக்கும் பெற்றோர், உறவினர்கள் என்று எவரும் திரையில் காட்டப்படவில்லை. அது நிச்சயமாகத் தவறு அல்ல. ஆனால், அதற்கான விளக்கமும் படத்தில் இல்லாதது குறையே.

போலவே, பின்பாதியில் சித்தார்த் விபின் மற்றும் அவரது மனைவியாக நடித்தவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், சோனியா அகர்வால் வீட்டைக் காட்டும் காட்சிகளும் தெளிவான விளக்கங்களுடன் அமையப் பெறவில்லை. முன்பாதிக்கும் பின்பாதிக்குமான தொடர்புக்கண்ணியாக விளங்கும் அந்தப் அப்பகுதிக்கு நியாயமான முக்கியத்துவத்தைத் தந்திருந்தாலே, இப்படத்தின் உயரம் இன்னும் அதிகமாகியிருக்கும்.

’7ஜி’ எனும் டைட்டிலை பெற்ற படக்குழு, அதற்குக் கிடைத்த ஈர்ப்பைத் தக்கவைக்கும் வகையில் உள்ளடக்கத்தைச் செறிவானதாக மாற்றத் தவறியிருக்கிறது. கொஞ்சம் கவனத்தைக் குவித்து சில இடங்களைச் சரிப்படுத்தி இருந்தால், அனைத்தும் சரிவரப் பொருந்தி நிற்கும் ’ஹாரர்’ படமொன்று வாய்த்திருக்கும் என்பதே ரசிகர்களின் வருத்தம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆம்ஸ்ட்ராங் கொலை… திமுக, காங்கிரஸை சாடும் ஜே.பி.நட்டா

போட்டித் தேர்வு நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு சட்டம் 2024

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர் !!!

சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்சில் சந்தேகமா? – சுனில் கவாஸ்கர் விளக்கம்!

“சே ஹாய்” டேட்டிங் ஆப்பில் ஏமாந்த இளைஞர் : எச்சரிக்கும் சைபர் கிரைம்

பாபு ஜகஜீவன்ராமும் நீதிபதி சந்துரு கமிஷன் பரிந்துரையும்!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்