Skip to main content

அடியோஸ் அமிகோ: விமர்சனம்!

 சோதிக்கும் இரண்டாம் பாதி!

வாழ்க்கையில் பொருளாதாரக் கஷ்டங்களால் நொந்து நூடுல்ஸ் ஆன ஒருவர், பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாத ஒரு செல்வந்தருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தால் என்னவாகும்? இதே தொனியில் மிகச்சில படங்கள் இதற்கு முன்னும் வந்திருக்கின்றன. ஆனால், அவற்றில் இருந்து வேறுபட்ட அனுபவத்தைத் தரும் என்கிற உத்தரவாதத்தைத் தந்தது ‘அடியோஸ் அமிகோ’ மலையாளப் பட ட்ரெய்லர்.

நஹாஸ் நாசர் இயக்கியுள்ள இப்படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு, ஆசிஃப் அலி, ஷைனி டாம் சாக்கோ, அனகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இதற்குப் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது இந்த ‘அடியோஸ் அமிகோ’!?

Adios Amigo X Review | Adios Amigo X Review Rating | Adios Amigo Malayalam Movie Review | Here's What Audiences Have To Say About Asif Ali And Suraj Venjaramoodu's Movie - Filmibeat

துளிர்க்கும் நட்பு!

முதன்முறையாகப் பார்க்கும்போதே சிலர் நட்பு பாராட்டுவார்கள். அவர்கள் வெளிப்படுத்துவது ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்று குழப்பம் முடிவடைவதற்குள், அந்தச் சந்திப்பு நிறைவுற்றுவிடும். அவர்கள் நம்மைவிட்டு அகன்றபின்னரே, அந்தச் சந்திப்பில் நமது சுயத்தை வெளிப்படுத்தினோமா என்ற கேள்வி எழும். அப்படிப்பட்ட சந்திப்பொன்றில் தங்களது சுயத்தை வெளிப்படுத்திக் கொண்ட இரு பாத்திரங்களை மையப்படுத்துகிறது இப்படம்.

எர்ணாகுளத்தில் பெயிண்டிங் வேலை செய்துவரும் சத்பிரியனுக்கு (சூரஜ் வெஞ்சாரமூடு) அவசரமான பணத் தேவை ஏற்படுகிறது. அவரது தாய் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். உடனிருக்கும் தங்கை ‘பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்’ என்று ’போன்’ செய்கிறார்.

சொந்த ஊரான கட்டப்பனையைச் சேர்ந்த, தன்னை வேலையில் சேர்த்துவிட்ட ஷோகனிடம் (ஷைன் டாம் சாக்கோ) அதற்காகக் கடன் கேட்கிறார் சத்பிரியன். அவரோ, அடுத்த நாள் காலையில் பேருந்து நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு சொல்கிறார்.

ஆனால், அடுத்த நாள் காலையில் சொன்னபடி ஷோகன் அங்கு வரவில்லை. தனக்கு வேறிடத்தில் வேலை இருப்பதாகவும், வருவதற்கு ஐந்தாறு மணி நேரம் ஆகும் என்றும் கூறுகிறார்.

கையில் டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் வெறுமையுடன் நிற்கிறார் சத்பிரியன். அந்த நேரத்தில், பிரின்ஸ் (ஆசிஃப் அலி) எனும் நபரைச் சந்திக்கிறார். மது போதையில், எதிர்ப்படும் மனிதர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கிறார் அந்த நபர்.

‘வாங்க நண்பா ஒரு டீ சாப்பிடலாம்’ என்று சத்பிரியனை அழைக்கிறார் பிரின்ஸ். முதலில் மறுக்கும் சத்பிரியன், பிறகு அவருடன் செல்கிறார். கேலிக்குரிய மனிதராக அவரை நோக்குபவர், மிகச்சில நிமிடங்களிலேயே பிரின்ஸ் சக மனிதர்களை நேசிப்பவர் என்று புரிந்துகொள்கிறார். அதன்பிறகு, அவர் செய்யும் சில தவறுகளை, குறும்புகளைப் பொறுத்துக் கொள்கிறார்.

இருவரும் மது போதையில் திருவனந்தபுரம் நோக்கிப் பயணிக்கின்றனர். திடீரென்று கோட்டயத்தில் இறங்குமாறு கூறுகிறார் பிரின்ஸ். அங்கு ஒரு ஜவுளிக்கடைக்கு இருவரும் செல்கின்றனர். அங்கிருக்கும் ஹேமாவைப் (அனகா) பார்க்க முயற்சிக்கிறார் பிரின்ஸ். அப்பெண் அதற்குச் சம்மதிப்பதில்லை.

அப்போது, சத்பிரியனைச் சந்திக்கும் அப்பெண் ‘இரவு கடை மூடியதும் வந்து பார்க்கச் சொல்லுங்க’ என்கிறார். அதனை சத்பிரியன் சொன்னதும் சந்தோஷமடைகிறார் பிரின்ஸ்.

பிறகு, சத்பிரியனை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார் பிரின்ஸ். அங்கு உயர் ரக மது, விதவிதமான உணவுகள் என்று அனைத்தும் இருக்கின்றன.

நள்ளிரவில் தூங்கி முழிக்கும் பிரின்ஸ், உடனடியாக ஹேமாவைப் பார்க்க வேண்டுமென்று கிளம்புகிறார். ‘இப்போ வேண்டாம்’ என்று அவரைத் தடுக்கிறார் சத்பிரியன். அந்த நொடியில், அவரைத் தரக்குறைவாக விமர்சிக்கிறார் பிரின்ஸ். ‘இனி உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது’ என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.

ஒரு நிமிடத்தில் வாழ்வே அதலபாதாளத்தில் விழுந்ததாக உணர்கிறார் சத்பிரியன். ஏனென்றால், தாயின் மருத்துவச் செலவுக்கான பணத்தை அடுத்த நாள் காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்ற அவரது எண்ணத்தில் மண் விழுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று நிற்கிறார் சத்பிரியன்.

அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘அடியோஸ் அமிகோ’வின் இரண்டாம் பாதி.

முன்பின் அறிமுகம் இல்லாத இரண்டு மனிதர்களுக்கு இடையே பூக்கும் உண்மையான நட்பினைக் காட்டுகிறது இக்கதை. அதுவே இப்படத்தின் சிறப்பு.

Adios Amigo Review: A Quirky Road Movie With Its Share Of Fun Moments | Times Now

வித்தியாசமான அனுபவம்!

வாழ்வில் கஷ்டத்தில் உழலும் நபர் என்று சொல்லும் அளவுக்கு இப்படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு தோன்றியிருக்கிறார். போலவே, செல்வச்செழிப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு கணமும் போதையில் மூழ்கிக் கிடக்கும் ஒருவரைக் கண்ணில் காட்டுகிறார் ஆசிஃப் அலி. இவர்கள் இருவரது நடிப்புமே இப்படத்தைத் தாங்கி நிற்கிறது. உண்மையிலேயே அப்படிப்பட்ட நபர்களைக் காண்கிற உணர்வைத் தருவதே அவர்களது நடிப்பின் வெற்றி.

இக்கதையில் அனகாவின் இருப்பு ரொம்பவே முக்கியமானது. ஆனால், அவர் இரண்டொரு காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து, பிரதானமாக வரும் பாத்திரங்களை நம் மனதுக்கு நெருக்கமாக்கும் வகையில் அல்தாப் சலீம், ஷைன் டாம் சாக்கோ, நந்து, வினீத் தட்டில் டேவிட், முத்துமணி, ஜினு ஜோசப் என்று பலர் இதில் நடித்துள்ளனர்.

கோபி சுந்தர், ஜேக்ஸ் பிஜோய் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை, காட்சிகளின் உள்ளடக்கத்தை மேலும் ஒருபடி உயர்த்திக் காட்டும்வகையில் உள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், கலை இயக்குனர் ஆஷிக், படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் என்று இதில் பங்காற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும், திரையில் ஒரு யதார்த்தமான வாழ்வைக் காணும் உணர்வை ஏற்படுத்த துணை நின்றிருக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கும் தங்கம், பிரதானமாக வரும் சத்பிரியன், பிரின்ஸின் அடிப்படை குணாதிசயங்களை வடிவமைத்த வகையில் சிறப்பானதொரு படத்தைக் காண வகை செய்திருக்கிறார். அவ்விரு பாத்திரங்கள் மட்டுமல்லாமல் இதர பாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

இயக்குனர் நஹாஸ் நாசர், வெவ்வேறுவிதமாக நகரச் சாத்தியமுள்ள ஒரு கதையை ‘ஸ்லைஸ் ஆஃப் லைஃப்’ எனும் வகைமையின் கீழ் நிற்க வைக்க முயற்சித்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சியில் நம் கண்ணில் நீர் வழியும்போது, அவரது முயற்சிக்கு வெற்றி கிட்டுகிறது. அந்த வகையில் வித்தியாசமானதொரு காட்சியனுபவத்தை இதில் காட்டியிருக்கிறார்.

’மீண்டும் சந்திக்கலாம் நண்பா’ என்பது தான் அடியோஸ் அமிகோவின் அர்த்தம். கிட்டத்தட்ட அந்த வார்த்தைகளை மனதாரச் சொல்வது போன்று இதில் காட்சிகள் அமைந்துள்ளன. அதனை நிகழ்த்துவது சாதாரணமானது அல்ல. அதனாலேயே, இந்தப் படத்தை இயக்கிய நஹாஸ் நாசரைப் பாராட்டித் தள்ளத் தோன்றுகிறது.

முதல் பாதி ஊட்டி மலை ரயிலாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி புறநகர் மின்சார ரயில் சிக்னலுக்காக காத்திருப்பதைப் போல ஆங்காங்கே நின்றுவிடுகிறது. அதனால், அது சிலரைச் சோதனைக்கு உள்ளாக்கலாம்.

‘பயணத்தில் காத்திருப்பு இயல்பு தானே’ என்பவர்களுக்கு, அது போன்ற இடங்கள் சலிப்பை ஊட்டாது. அதேநேரத்தில், ஜெட் வேகத்தில் நம் இலக்கைச் சென்றடைய விரும்புபவர்களுக்கு அப்பயணம் எரிச்சலின் உச்சத்தில் நிற்க வைக்கும்.

நீங்கள் எப்படிப்பட்ட பயணத்தை, வாழ்க்கையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ‘அடியோஸ் அமிகோ’ உங்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போகலாம் அல்லது கொஞ்சம் கூடப் பிடிக்காமலும் போகலாம். அதுவே அப்படத்தின் யுஎஸ்பி.

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேவநாதன் யாதவ் கைது : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்!

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன்!

  உதயசங்கரன் பாடகலிங்கம் கவிதைக்காரனா? ஆக்‌ஷன் ஹீரோவா? தமிழ் திரையுலக நாயகர்களில் சிலரது படங்கள் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று சொல்லத்தக்கதாக இருக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும் அளவுக்கு, அவர்களது முந்தைய படங்கள் ரசிகர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நிச்சயம் வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் பட அனுபவத்தைப் பெறலாம் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த வரிசையில், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படமும் வழக்கமான விஜய் ஆண்டனி படம் போல அமைந்திருக்கிறதா? நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைத் தருகிறதா? எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது ‘மழை பிடிக்காத மனிதன்’? கவிதையாய் சில காட்சிகள்! ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற டைட்டிலை கேட்டவுடன் நமக்குள் என்ன மாதிரியான கதை தோன்றும்? மழையை ஆராதிப்பதுதான் சினிமாவுலக நாயக, நாயகிகளின் வழக்கம். அப்படிப்பட்ட மழையை வெறுக்கத்தக்க அளவுக்கு, நாயகனின் வாழ்வில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்திரு...