Skip to main content

விமர்சனம்: போட்!

 உதயசங்கரன் பாடகலிங்கம்

சிம்புதேவன் பாணியில் ’இன்னொரு’ படம்!

ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போவதற்கு முன்னர், ‘இதுவரை பார்த்தறியாத அனுபவத்தை அப்படம் தர வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஒருகாலத்தில் ஒரு சிலரிடத்தில் இருந்த அந்த எண்ணம், இன்று பரவலாகிப் பெருகியிருக்கிறது. அதற்கேற்ப புதுவிதமான அனுபவத்தைத் தரும் திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுகின்றன.

அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான அனுபவத்தைத் தருகிற காரணத்தாலேயே சில படங்கள் கவனிக்கப்படாமல் போவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அப்படியொரு சுழலில் தொடர்ச்சியாகச் சிக்கி வருகின்றன இயக்குனர் சிம்புதேவன் படைப்புகள். ‘பேண்டஸி’யான கதைக்களங்களில் சமகாலச் சமூக, அரசியல் நிகழ்வுகள் மீதான விமர்சனங்களைக் கலக்கும் அவரது திரைக்கதை ட்ரீட்மெண்டும் அதற்கொரு காரணமாக உள்ளது.

அதேநேரத்தில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அவரது முதல் படமான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ தொடங்கி இதுவரை வெளியாகியிருக்கிற அவரது படைப்புகள் எதையும் ‘வழக்கமான தமிழ் சினிமா’ என்று முத்திரை குத்திவிட முடியாது என்பதையும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.

தனது பாணி கதை சொல்லலுக்கும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்குமான இடைவெளியை நிரப்ப வெகுகாலமாக முயன்று வருகிறார் சிம்புதேவன். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ‘போட்’.

யோகிபாபு, கொளப்புல்லி லீலா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன், ஆர்ஜே ஷரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘போட்’ தரும் அனுபவம் எப்படிப்பட்டது?

ஓரிடத்திற்குள் சுழலும் கதை!

1943ஆம் ஆண்டு இந்தியாவின் மீது ஜப்பான் குண்டுகள் வீசப் போவதாகச் செய்திகள் வெளியான சமயம் இத்திரைக்கதை நிகழ்வதாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்.

குமரன் (யோகிபாபு) என்ற மீனவர், ஆங்கிலேயர் பிடியில் இருக்கும் தனது சகோதரனை மீட்க முனைகிறார். அதற்காக, ஒரு அதிகாரியின் சிபாரிசு கடிதத்தை எடுத்துக்கொண்டு, பாட்டியுடன் (கொளப்புல்லி லீலா) கடலோரத்தில் இருக்கும் அதிகாரிகள் முகாமுக்குச் செல்கிறார்.

குமரன் கொண்டுவந்த கடிதத்தைப் பார்க்கும் ஒரு அதிகாரி, அவரைத் திட்டி, அடித்து அவமானப்படுத்துகிறார். அந்த நேரத்தில், ஜப்பான் விமானப்படை விமானங்கள் மெட்ராஸ் மீது குண்டு வீசப் போவதாகத் தகவல் கிடைக்கிறது.

அதையடுத்து, அந்த இடத்தில் களேபரம் நிகழ்கிறது. மக்கள் அங்குமிங்கும் ஓடுகின்றனர்.

அப்போது, ‘உன் தம்பியை இங்கிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றுவிடு’ என்கிறார் ஆங்கிலேயப் படையில் இருக்கும் ஒரு வீரர். அதேபோல, அவரை அங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்கிறார் குமரன்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓடி வர முடியாமல் சிரமப்படுகிறார் குமரனின் சகோதரர். கடற்கரையில் இருக்கும் படகு அருகே நெருங்கும்போது, பாட்டியையும் குமரனையும் முன்னே செல்லுமாறு அவர் கூறுகிறார்.

அவர்கள் இருவரும் படகில் ஏற, பின்னாலேயே பொதுமக்களில் சிலர் ஜப்பான் குண்டுக்குப் பயந்து அதில் ஏறுகின்றனர். அதற்குள், குமரனின் சகோதரைத் தாக்கி, அவரை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கிறார் ஒரு நபர். அக்காட்சியைப் பார்த்தவாறே வேறு சிலரும் படகில் ஏறிக் குதிக்கின்றனர்.

அவர்களைப் பிடிக்க ஆங்கிலேயப் படையினர் ஓடி வர, வேகவேகமாகப் படகை நடுக்கடலுக்குள் செலுத்துவதில் குறியாக இருக்கிறார் குமரன். ஆழமான கடல்பகுதிக்குச் சென்றால், நிலப்பகுதியில் வீசப்படும் குண்டு மழையில் இருந்து தப்பிக்கலாம் என்பது அவரது எண்ணம்.

அப்போதுதான், தனது சகோதரர் படகில் ஏறாமல் மீண்டும் ஆங்கிலேயர் வசம் சிக்கியதை அறிகிறார் குமரன். கரைக்குத் திரும்பினால் கைது நிச்சயம் என்ற நிலையில், படகைக் கடலுக்குள் திருப்புகிறார்.

அந்தப் படகில் விஜயா (மதுமிதா) எனும் கர்ப்பிணி, அவரது பத்து வயது மகன், ராஜா (ஆர்ஜே ஷரா), நாராயணன் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமி (கௌரி கிஷன்), முத்தையா (எம்.எஸ்.பாஸ்கர்) எனும் முதியவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் (சாம்ஸ்) ஆகியோர் இருக்கின்றனர்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர்களது பின்னணியையும் மனப்பாங்கும் நமக்குக் காணக் கிடைக்கிறது.

ரோந்து படகு வர முடியாத தொலைவுக்குப் படகு சென்ற நிலையில், கடல் பகுதியில் ஒரு படகு கவிழ்ந்து கிடப்பதைக் காண்கிறார் குமரன், அப்போது அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஆங்கிலேய அதிகாரி இர்வின் (ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன்), அவர்களது படகில் ஏறுகிறார். அவரது கையில் துப்பாக்கி இருக்கிறது.

’அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துவிடும் நீ கடலில் குதித்துவிடு’ என்று இர்வினை எச்சரிக்கிறார் குமரன். ஆனால், அவர் கேட்பதாக இல்லை.

அதையடுத்து ஏற்படும் மோதலில், துப்பாக்கியை எடுத்து சுடுகிறார் இர்வின். அதனால், படகில் ஓட்டை விழுகிறது.

இதற்கிடையே, இர்வின் கொண்டுவந்த வயர்லெஸ் சாதனம் மூலமாக, அந்தப் படகில் ஒரு தீவிரவாதி இருக்கும் தகவல் தெரிய வருகிறது.

‘யார் அந்த தீவிரவாதி’ என்ற கேள்வியை அடுத்து, படகில் இருக்கும் ஒவ்வொருவரும் இதர நபர்களைச் சந்தேகிக்கத் தொடங்குகின்றனர். ஒருகட்டத்தில் அதற்கும் விடை கிடைக்கிறது.

அந்தப் பிரச்சனை முடிவுக்கு வருவதற்குள்ளாகவே, சுறா ஒன்று அந்தப் படகைத் தாக்க வருகிறது.

உணவும் தண்ணீரும் இல்லாமல் அல்லாடும் நிலையில், படகையும் கரை நோக்கித் திருப்ப முடியாத சூழலில், ‘யாராவது மூன்று பேர் கடலில் குதித்தால் மட்டுமே மீதமிருப்பவர்களைக் காக்க முடியும்’ என்கிறார் குமரன்.

 

அந்தக் கணம் முதல், தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளும் வேட்கையில் எதிரே இருப்பவர்களைப் பலி கொடுக்க, ஒவ்வொருவரும் தயாராகின்றனர். அதுநாள் வரை, அந்த மனிதர்கள் மூளையில் பொதிந்துள்ள குரூரமான சிந்தனைகளும் அந்த வேளையில் வெளிப்படுகின்றன.

இறுதியில், அந்த படகு கரை வந்து சேர்ந்ததா? அதிலிருந்த அனைவரும் உயிர் தப்பினார்களா என்பதைச் சொல்வதுடன் ‘போட்’ நிறைவடைகிறது.

தனது தங்கை மற்றும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட கணவருடன் கடற்கரையில் குமரன் பேசுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதன்பிறகு, கரையோரத்தில் இருக்கும் ஆங்கிலேயப் படையின் முகாமைக் காட்டினாலும், மொத்தப்படமும் படகில் நிகழ்வதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், திரைக்கதையின் பெரும்பகுதி ஓரிடத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது.

அதனால் பார்வையாளர்களுக்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் ஆங்காங்கே சில திருப்பங்களைச் சொல்லிக்க்கொண்டே வருகிறார் இயக்குனர் சிம்புதேவன். அதையும் மீறிச் சில இடங்களில் நம்மை அயர்வு தொற்றுகிறது.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலைக் காட்டிய இயக்குனர் சிம்புதேவன், அதனுடன் சமகாலச் சமூகம் மீதான விமர்சனங்களைக் கலந்திருப்பது அந்த அயர்ச்சியைப் போக்குகிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பியாக உள்ளது.

வேறுபட்ட அனுபவம்!

யோகிபாபு இப்படத்தில் குமரன் எனும் மீனவராக நடித்துள்ளார். அவரது பாணியில் நக்கல் நையாண்டி கலந்த வசனங்களைப் பேசினாலும், சென்னையின் பூர்வகுடியாகவே அவரது குரல் ஒலிப்பது வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.

முத்தையாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அவ்வப்போது அறிவுரைகளை அள்ளித் தெளிப்பவராக வந்தாலும், அவரது பாத்திரத்தின் பின்னணியை ரசிகர்கள் ஈர்க்கும்விதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

சின்னி ஜெயந்த் ஏற்ற நாராயணன் பாத்திரம் வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஆனால், அவரது மகளாக வரும் கௌரி கிஷனின் இருப்பு அதனை மறக்கடிக்கிறது.

கானா பாடலை கர்நாடக இசை பாணியில் கௌரி பாடுவதாக அமைந்த காட்சி, அப்பாத்திரங்கள் குறித்த கேள்விகளை இல்லாமல் ஆக்குகிறது.

போலவே மதுமிதா, கொளப்புல்லி லீலா, ஷரா, இர்வின் ஆக வரும் ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் என்று இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் சிறப்பானதொரு பங்களிப்பைத் தந்துள்ளனர்.

படம் முழுக்கச் சிரிப்புக்கான சந்தர்ப்பங்களை வாரியிறைத்திருக்கிறார் சாம்ஸ். முந்தைய படங்களான ‘அறை எண் 305இல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’மில் அவருக்குச் செமையான வாய்ப்பு தந்த சிம்பு தேவன், இதிலும் அதனை மீளாக்கம் செய்திருக்கிறார்.

வட இந்தியராக வந்து சாம்ஸ் அடிக்கும் கமெண்ட்கள் தியேட்டரில் விசிலை அள்ளுகின்றன.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, நாமே நடுக்கடலுக்குள் மாட்டிக்கொண்ட உணர்வை ஊட்டுகிறது. பெரும்பாலான காட்சிகள் ‘க்ரீன்மேட்’டில் படம்பிடிக்கப்பட்டாலும், அந்த எண்ணம் எழாதவாறு விஎஃப்எக்ஸ் குழு பார்த்துக் கொண்டுள்ளது.

வெறுமனே பாத்திரங்களின் பாவனைகள், உணர்வெழுச்சிகள், திரைக்கதை திருப்பங்களைச் சுற்றியே காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதனைத் தொகுக்க தினேஷ் பொன்ராஜ் சிரமப்பட்டிருப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது.

கிப்ரானின் பின்னணி இசையும் சரி, அவர் தந்த பாடலும் சரி, நம்மைத் திரையுடன் கட்டிப்போடும் விதத்திலுள்ளன.

ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகளில் கதாபாத்திரங்களின் தோற்றத்தில் நிகழும் மாற்றங்களைக் காட்டுவது கடினமான காரியம். ஒப்பனையைக் கையாண்டுள்ள பட்டணம் ரஷீத் குழு அதனைச் சாதித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

இன்னும் கலை வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்தப் படத்தின் தன்மையைப் பாதிக்கா வண்ணம் அமைந்துள்ளன.

கற்பனையான ஒரு கதை என்றபோதும், அதற்கு நம்பும்விதமாக ஒரு உருவத்தைக் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன். தொடக்கம் முதல் இறுதியாக வரும் ஷாட் வரை, அவர் சமகாலச் சமூகம் மற்றும் அரசியலை விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்.

வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் தேடி உணவு கொண்டு வரும் சேவை வந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழ, ‘சோம்பேறித்தனமும் பணக்கொழுப்பும் அதிகமாகிப்போன காலத்துல அது நடக்கும்’ என்று வசனத்தைப் பதிலாகத் தந்திருப்பது அதற்கொரு உதாரணம்.

இந்தக் கதையில் இயல்பை மீறித் துருத்தலாகத் தெரியும் கதாபாத்திர வார்ப்புகளை, அவை பேசும் வசனங்களை நம்மால் அடையாளம் காண முடியும். முடிந்தவரை, அந்த இடங்களில் செயற்கைத்தனம் தென்பட்டுவிடக் கூடாது என்று காரண, காரியங்களை அவற்றின் மீதேற்றியிருக்கிறார் சிம்புதேவன். அந்த மெனக்கெடல் அசாதாரணமானது.

வழக்கமாக, இது போன்ற கதைக்களங்கள் நமக்கு ‘போரடிக்கும்’ காட்சியனுபவத்தையே தரும். அது நிகழக்கூடாது என்று திரைக்கதையில் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் சிம்புதேவன். அந்த மெனக்கெடலுக்காக, நிச்சயம் ‘போட்’ பரவலான கவனத்தைப் பெற வேண்டும்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ நாம் கருத்துகளை அள்ளி வீசலாம். ஆனால், அதற்கு முன்னர் இப்படத்தை ,முழுமையாகப் பார்க்க வேண்டியது அவசியம். அதுவே, சிம்புதேவன் குழுவினர் கொட்டியிருக்கும் உழைப்புக்கு உரிய மரியாதையாக இருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் தந்த ஷாக்!

தொடர்கதையாகும் யானைகளின் இறப்பு: தீர்வு என்ன?

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்