Skip to main content

விமர்சனம்: வாஸ்கோடகாமா!

 உதயசங்கரன் பாடகலிங்கம்

தலைகீழாக இயங்கும் உலகம்!

அறுபது, எழுபதுகளில் வேறு மொழிகளில் வெளியான படங்களைப் பார்த்து, அவற்றின் சாராம்சத்தைக் கொண்டு புதிதாகக் கதை, திரைக்கதையை எழுதிப் படமாக்கும் வழக்கம் இருந்தது. அப்போது பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனங்கள் அதனை ஒரு உத்தியாகவே பயன்படுத்தின. அப்படிப்பட்ட படங்களை அடையாளம் கண்டு தமிழில் ஆக்கும் பணியில் சில கதாசிரியர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டனர். மிகப்பெரிய வெற்றிகள், சுமாரான வெற்றிகளைப் பெற்ற படங்கள் மட்டுமல்லாமல் தோல்வியுற்ற படங்களிலும் கூடச் சுவையான கதைகளை அவர்கள் கண்டெடுத்தனர்.

சரி, இதனைச் சொல்வதற்கும் ‘வாஸ்கோ ட காமா’ படத்தை விமர்சிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

அதற்கான விளக்கமாகவே இந்த விமர்சனம் உள்ளது.

நல்லதுக்கு காலம் இல்ல..!

‘நல்லதுக்கு காலம் இல்ல’ என்ற புலம்பலை இன்று பரவலாகக் கேட்க முடிகிறது. ஒவ்வொரு யுகத்திலும் நல்லவர்களின் எண்ணிக்கை, கெட்டவர்களின் எண்ணிக்கை என்ன விகிதத்தில் இருந்தது என்று ‘கணக்கு’ சொல்பவர்களையும் நாம் கண்டிருப்போம். அப்படியொரு மேற்கோள் உடன் ‘வாஸ்கோ ட காமா’ திரைக்கதையைத் தொடங்குகிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

கெட்டவர்களுக்கும் கேடுகெட்ட விஷயங்களுக்கும் மட்டுமே வரவேற்பு கிடைக்கும் என்கிற உலகில், நாயகன் நல்லவனாக வாழ்வதால் ஏற்படும் பிரச்சனைகளை விவரிக்கிறது ‘வாஸ்கோ ட காமா’. அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே ‘ஐய்யே நல்லவனா இருக்கறவனை எப்படி நம்புறது’ என்று தூற்றுகின்றனர். இந்த விளக்கமே, இப்படம் காட்டும் உலகம் எப்படியிருக்கும் என்பதை உணர்த்திவிடும்.

வாசுதேவன் (நகுல்) ஒரு இளம் வாலிபர். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று எண்ணுபவர். அதனால் அடிக்கடி வம்பு வழக்குகளில் சிக்குபவர். அவரை போலீசார் கைது செய்யும்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றுவது சகோதரர் மகாதேவன் (பிரேம்). ‘நல்லவனா ஏண்டா வெளியில காமிச்சுக்குற, உனக்குள்ளேயே வச்சுக்க வேண்டியதுதானே’ என்பது தம்பிக்கு அந்த அண்ணன் சொல்லும் அறிவுரை.

ஒருநாள் கைவிரலில் அடிபட்டுவிட்டது என்று விசும்பும் சகோதரரை, ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் வாசு. அந்த மருத்துவமனையில் இருப்பவர்களோ, அவரை ‘ஐசியு’வில் வைக்கின்றனர். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறுதியாக, அவர் இறந்து போகிறார்.

சகோதரர் இறந்த துக்கம் தாளாமல், வெளியூரில் இருக்கும் தனது உறவினரைச் (முனீஸ்காந்த்) சந்திக்கச் செல்கிறார் வாசுதேவன். அவரோ, ‘என் அண்ணன் மகன் மிக மோசமானவன்’ என்று விளக்கங்களை அள்ளித் தெளித்து, ஒரு வீட்டு உரிமையாளரின் நன்மதிப்பைப் பெறுகிறார். அங்கு, வாசுதேவன் வாடகைதாரர் ஆகக் குடியேறுகிறார்.

அந்த வீட்டு உரிமையாளரின் மகள், சிறுவயதில் வாசுதேவன் உடன் படித்தவர். அது தெரிய வந்தபிறகு, இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. அது காதலாக மலர்ந்து கல்யாண மேடை வரை செல்கிறது.

திருமண நாளன்று, சிலர் ஒரு நபரைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதைக் காண்கிறார் வாசுதேவன். ‘பார்க்க அண்ணன் மாதிரி இருக்காரே’ என்றெண்ணி, அவரைக் காப்பாற்றக் களமிறங்குகிறார். வாசுதேவனிடம் அடி வாங்கிய ஆட்கள் மயங்கிக் கிடக்க, அந்த நபர் தப்பியோடி விடுகிறார்.

’அநியாயம் நடக்குறப்போ வேடிக்கை பார்க்காம ஏன் தட்டிக் கேட்ட’ என்று சொல்லி வாசுதேவனைக் கைது செய்கின்றனர் போலீசார். வாஸ்கோடகாமா சிறைச்சாலையில் அவர் அடைக்கப்படுகிறார்.

அந்தச் சிறையில் தான் சிறு வயதில் இழந்த தந்தையைக் (கே.எஸ்.ரவிக்குமார்) காண்கிறார். அதேநேரத்தில், அவரைக் கொலை செய்வதற்காகக் கோவர்தன் (வம்சி கிருஷ்ணா) எனும் நபரும் அந்தச் சிறைக்கு வருகிறார்.

கோவர்தனும் வாசுதேவனும் சகோதரர்கள் இல்லை. ஆனால், அவர்களது தந்தைகள் இருவரும் ஒருமாதிரியாகத் தோற்றமளிக்கின்றனர்.

அந்த உண்மை தெரியாமல், வாசுதேவனின் தந்தையைக் கொலை செய்யச் செல்கிறார் கோவர்தன். அதன்பிறகு என்னவானது என்பதோடு படம் நிறைவடைகிறது.

உண்மையைச் சொன்னால், ‘வாஸ்கோ ட காமா’ கதை ஒரு அபாரமான பகடி திரைப்படத்திற்கானது. தலைகீழாக இயங்கும் உலகினை நமக்குக் காட்டுகிறது.

சமீபகாலமாக, தற்காலச் சமூகம், அரசியலை விமர்சிக்கிற வகையிலான திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் அப்படிப்பட்ட விஷயங்களுக்கே வரவேற்பு உண்டு எனும் சூழலில், இந்தப் படம் செய்திருக்க வேண்டிய மாயாஜாலம் கற்பனைக்குள் அடங்காதது. ஆனால், அதனை மிகத்துல்லியமாக ‘மிஸ்’ செய்திருக்கிறது ‘வாஸ்கோ ட காமா’.

ஏன் இவ்ளோ குழப்பம்?

அறத்தின் வழி வாழ வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, இந்த உலகில் பெரும்பாலானவர்கள் செயல்படுகிறார்களா? இந்தக் கேள்விக்கு ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கும். அதேநேரத்தில், ‘கெட்டவனுக்குத்தாண்டா இந்த உலகத்துல வரவேற்பு கிடைக்கும்’ என்று எங்கும் எவரும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட முடியாது. அதுவே  உலக நியதி.

அதனை ‘அசால்டாக’ மீறியிருக்கிறது ‘வாஸ்கோ ட காமா’ திரைக்கதை. அந்த ஒரு காரணமே, இந்தப் படத்தைத் தேடிச் சென்று பார்க்கக் காரணமாக விளங்குகிறது. ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல என்று உணர மறந்திருக்கிறார் இதன் இயக்குனர் ஆர்ஜிகே.

வாசுதேவனும் மகாதேவனும் எங்கு வாழ்கின்றனர்? அவரது பெற்றோர் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் முன்னொரு காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள்? ஏன் பிரிந்தனர் என்ற கேள்விகளுக்குப் படத்தில் பதில் இல்லை.

போலவே, அநியாயங்களின் திருவுருவமான கோவர்தன் ஏன் நியாயவான் ஆக வாழ்ந்த தனது தந்தையை எதிர்க்க வேண்டு? அதற்கான காரணமும் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.

இது போதாதென்று கோவர்தன், வாசுதேவன் தந்தையர் இருவரும் ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்றனர். மகாதேவனைப் போலவே இருக்கும் நபரை சகாதேவன் என்று சொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர்.

கதை கிழக்கில் சென்றால், திரைக்கதை மேற்குத் திசை நோக்கிச் செல்வது என்பது இதுதான் போலும்!

இவையனைத்தையும் பார்க்கையில் ‘ஏன் இவ்ளோ குழப்பம்’ என்றே இயக்குனரிடம் கேட்கத் தோன்றுகிறது.

அதேநேரத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் எதிர்பார்க்கிற விஷயங்கள், சமூகத்தில் நல்ல குணாதிசயங்கள் கொண்டவர் நோக்கப்படுகிற விதம், தலைகீழாகச் செயல்படும் சிறைச்சாலை நிர்வாகம் என்று படம் நெடுக ‘விமர்சனப்பூர்வமாக’ பலவற்றைப் புகுத்தியிருக்கிறார் ஆர்ஜிகே. உண்மையில் அவை இந்தப் படத்தைத் தனித்துவமானதாக மாற்றியிருக்கின்றன.

ஆனால், தெளிவற்ற திரைக்கதை போக்கும் மிக மோசமான காட்சியாக்கமும் சேர்ந்து அந்த சிறப்பினை இருட்டடிப்பு செய்திருக்கின்றன.

ஆங்காங்கே சிரிக்கலாம்!

‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ படங்களுக்குப் பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கவனம் ஈர்த்தால் நடிகர் நகுல். இதுவும் அந்த வரிசையில் சேர்ந்திருக்க வேண்டியது.

நாயகி அர்த்தனா பினு பார்க்கப் பாந்தமாக இருக்கிறார். ஓவர் மேக்கப்பை தாண்டி அவரது அழகிய முகம் நம்மைக் கவர்கிறது.

முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள் சிரிப்பு மூட்ட, கே.எஸ்.ரவிக்குமார் ரொம்பவே சீரியசாக நடித்து நம்மைக் கவர்கிறார்.

’வெற்றிக்கொடி கட்டு’ ரெபரென்ஸ் உடன் இதில் தலைகாட்டியிருக்கிறார் ஆனந்தராஜ். அது போன்ற சில இடங்கள் நம்மை ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன.

வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணாவுக்குப் பெரியளவில் ‘ஸ்கோப்’ தரப்படவில்லை.

இவர்கள் தவிர்த்து டி.எம்.கார்த்திக், அனிதா சம்பத் உள்ளிட்ட சிலர் இதில் நடித்துள்ளனர்.

என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு, ஏழுமலை ஆதிகேசவனின் கலை வடிவமைப்பு, தமிழ் குமரனின் படத்தொகுப்பு என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

அருண் என்.வி. அமைத்திருக்கும் பின்னணி இசை, காட்சிகளிலும் வசனங்களிலும் சொல்லப்படாத நகைச்சுவையை உருவாக்க முயன்றிருக்கிறது.

எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் ஆர்ஜிகே, இரண்டிலும் சில விஷயங்களை ‘மிஸ்’ செய்திருக்கிறார். அழுத்தமாகத் திரையில் தெரிய வேண்டிய காட்சிகள் சவசவ என்று நகர்கின்றன.

வழக்கமாகச் சமகால சமூக அரசியல் நடப்புகளை விமர்சிக்கிற விதமாகவே ‘பகடி’ திரைப்படங்கள் அமையும். அவையும் கூட வரவேற்பை ஈட்டுவதில் சிக்கல்களைச் சந்திக்கும். ‘வாஸ்கோ ட காமா’ படமோ சாதாரண மனிதர்களிடத்தில் மாறிவரும் மனப்பாங்கையும் ‘நக்கல்’ அடிக்கிறது. ஆனால், அப்படியொரு பார்வை சில ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறது என்பதனைத் திரையரங்கில் காண முடிந்தது.

செறிவான உள்ளடக்கம் கொண்ட படமாக ‘வாஸ்கோ ட காமா’வைத் தந்திருந்தால், அந்த கைத்தட்டல்களின் ஒலியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

ஏற்கனவே சொன்னது போல, இப்படத்தின் கதை வழக்கத்திற்கு மாறானது. இந்த ஐடியாவை கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்தால் அற்புதமானதொரு ‘கல்ட்’ கிளாசிக் நமக்கு காணக் கிடைக்கும். வேறு மொழிகளில் அது விரைவில் நிகழும் என்று நம்புவோம். ‘வாஸ்கோ ட காமா’ செய்திருக்கும் சம்பவம் அது மட்டுமே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொடர் சரிவு… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

சொத்துக்குவிப்பு வழக்கு: கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவு ரத்து!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல்வரின் ஃபெலோஷிப் திட்டத்தில் பணி!

Olympics 2024: ஆடவர் ஹாக்கி… அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா… வெண்கலம் கிடைக்குமா?

ஜெயரஞ்சனுக்கு முதல்வர் ஸ்டாலின் தந்த புது அசைன்மென்ட்!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்