Skip to main content

விமர்சனம் : நண்பன் ஒருவன் வந்த பிறகு!

 நாயகனின் டைரிக் குறிப்பு! 

உதயசங்கரன் பாடகலிங்கம்

‘நண்பன் ஒருவன் வந்தபிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே’ என்ற ‘முஸ்தபா.. முஸ்தபா..’ பாடல் வரிகள் என்றென்றைக்குமானது. அந்த வரிகளையே வாழ்க்கையாகச் சொல்லும் அளவுக்குத் திரையில் ஒரு கதையைச் சொல்லிவிட முடியுமா? ‘கொஞ்சம் முயற்சித்துப் பார்ப்போமே’ என்று களமிறங்கி இருக்கிறது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படக்குழு.

அனந்த் ராம் இப்படத்தை இயக்கியதோடு நாயகனாகவும் நடித்துள்ளார். ‘விடுதலை’ படத்தில் நாயகியாக வந்த பவானி ஸ்ரீ இதில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஹெச்.காஷிப் இதற்கு இசையமைத்துள்ளார்.

எப்படியிருக்கிறது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’?!

‘ஆட்டோகிராப்’ கதை!

சென்னை நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர், தனது குழந்தைப் பருவம் முதல் தற்போதைய வாழ்க்கை வரை விலாவாரியாக விளக்கினால் எப்படியிருக்கும்? அப்படியொரு ‘ஆட்டோகிராப்’ ரக கதையாக உள்ளது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.

சிறுவனாக இருந்த காலகட்டத்தில், ஆனந்துக்குப் பெற்றோரை விடப் பாட்டி தான் நெருக்கமான உறவாக இருக்கிறார். படையப்பா ஓடும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று, அவரை ரஜினி ரசிகராக மாற்றியவர் பாட்டி தான். பள்ளி, வீடு எங்கும் நண்பர்கள் என்றிருக்கும் ஆனந்தின் மகிழ்ச்சியான வாழ்வைக் ‘ஆனந்தம் காலனி’க்கு இடம்பெயர்கிறது அவரது குடும்பம்.

ஆனால், ஆனந்த் நினைத்தது போல அந்த இடம் இல்லை. அங்கு சென்றவுடனேயே ஆதி கேங்க் உடன் இணைகிறார் ஆனந்த். அதற்கு எதிராக நிற்கும் லலித் கேங்குக்கு எதிரி ஆகிறார். ரஜினி ரசிகர்கள், ஷாரூக் ரசிகர்கள் என்று எதிரெதிர் திசையில் இரு தரப்பும் மோதிக் கொள்கிறது. பள்ளியிலும் அது தொடர்கிறது.

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, காலனியில் வசிக்கும் நண்பர்கள் வெவ்வேறு கல்லூரியில் சேர்கின்றனர். ஆதி (ஆர்ஜே விஜய்) விஷுவல் கம்யூனிகேஷன் சேர, தானும் அதில் சேர வேண்டுமென்று நினைக்கிறார் ஆனந்த் (அனந்த் ராம்).

அப்போது, ரஞ்சி அணியில் இடம்பெறும் அளவுக்குத் தீவிர கிரிக்கெட் வேட்கை கொண்டிருந்த தான் பொருளாதாரச் சிக்கலாலும் குடும்பத்தாலும் திசை மாறிய அனுபவங்களைப் பகிர்கிறார் ஆனந்தின் தந்தை. அடுத்த நொடியே, அவர் சொல்லும் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.

ஆனந்தைப் போன்ற மாணவர்களுக்கு மட்டுமல்ல, அந்தக் கல்லூரி நிர்வாகத்திற்கும் அதுவே முதலாம் ஆண்டு.

பாதி கட்டப்பட்ட கட்டடங்களைப் பார்த்து ‘டென்ஷன்’ ஆகும் ஆனந்த், பிறகு கல்லூரிச் சூழல், உடன் படிக்கும் மாணவ மாணவியர், கேண்டீன் என்று எல்லாவற்றைப் பார்த்தும் எரிச்சல் கொள்கிறார். ஆனால் ஹெச் ஓ டி (ஐஸ்வர்யா), நண்பர்கள் (கேபிஒய் பாலா உள்ளிட்ட சிலர்) என்று ஆனந்த் மகிழ்ச்சி கொள்ளும்விதமாகச் சிலரை அறிமுகப்படுத்துகிறது அந்தக் கல்லூரி வாழ்க்கை. கண்ணம்மாவும் அதில் ஒருவராக, வேகவேகமாக இடம்பிடிக்கிறார்.

ஆனந்தம் காலனிக்கு புதிதாக வந்த கண்ணம்மாவும் ஆனந்தின் கிளாஸ்மேட் தான். அவரது வரவு, ஆனந்தின் மனதில் பல கனவுகளைத் தூவுகிறது. நட்பாய் தொடங்கும் உறவு காதலாக மாறுகிறது.

கூட்டத்தைக் கண்டாலே ‘மேடை பயத்தில்’ மயக்கமிடும் வழக்கம் கொண்ட ஆனந்த், கல்லூரியில் தன்னுடைய புராஜக்டை சமர்ப்பிக்க முடியாமல் தடுமாறுகிறார். ஆனால், ‘பிகம் எ ஸ்டார்’ எனும் அவரது ஐடியா ஹெச்ஓடியை கவர்கிறது. அதை ‘டெவலப்’ செய்யச் சொல்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ’பிகம் எ ஸ்டார்’ ஐடியாவை மையமாக வைத்து ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் தொடங்கலாம் என்கிறார் ஆனந்த். ஆனந்தம் காலனி மற்றும் கல்லூரி நண்பர்களும் ‘சரி’ என்கின்றனர். சில நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துகின்றனர்.

ஆனாலும், ‘பிகம் எ ஸ்டார்’ஐ ஒரு செயலியாக மாற்றும் ஆனந்தின் எண்ணம் நிறைவேறுவதாக இல்லை. அம்முயற்சி தாமதமாகிறது. அதனால், அவர்களைத் தேடி வந்த பலர் பின்வாங்குகின்றனர்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அதை நம்பியே போகிறது. ஆனந்தின் நண்பர்கள், தோழிகள் ஒவ்வொருவராக வெவ்வேறு திசை நோக்கி நகரத் தொடங்குகின்றனர். இறுதியாக, ஆனந்த் மட்டுமே தனியே நிற்கிறார்.

nanban oruvan vanthapiragu

என்னதான் நண்பர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருந்தாலும், அப்போது ஆனந்த் வெறுமையாக உணர்கிறார். அதிலிருந்து மீள முடியாமல் நட்பையும் காதலையும் விட்டு விலகி நிற்கிற முடிவுக்கு வருகிறார்.

அது போதாதென்று, நண்பன் ஒருவனின் பேச்சு ஆனந்தை சுக்குநூறாக்குகிறது. மற்றவர்களுக்குப் பாரமாக இல்லாமல் இருக்க, நாம் எங்காவது போனால் தான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறார்.

அந்தச் சூழலில், சிங்கப்பூரில் எம்.எஸ். படிப்பு பயிலும் வாய்ப்பு ஆனந்துக்குக் கிடைக்கிறது. நண்பர்களும் குடும்பத்தினரும் கண்ணீருடன் வழியனுப்ப, சிங்கப்பூர் செல்கிறார்.

புதிய இடத்துடன் பொருந்த முடியாமல் திணறினாலும், சிங்கப்பூரில் அறிமுகமாகும் அழகர் (வினோத்) ஆனந்துக்கு ஆறுதல் தருகிறார். அவருடன் மூன்று பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஐவர் ஆகிறார் ஆனந்த்.

அந்த வீட்டில் ஆனந்துக்கு பிடிக்காத ஒரு ஆள் உண்டு. அவரது பெயர் லலித். ஆம், ஆனந்தம் காலனியில் யாரை எதிர்த்து நின்றாரோ, அதே லலித் தான் அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறார்.

ஆனால், காலம் தான் அனைத்துக்கும் அருமருந்து இடக் கூடியதாயிற்றே. ஆனந்தம் காலனி நட்புகள், கல்லூரி நினைவுகள், கண்ணம்மாவின் காதல் போலவே அழகரின் வழிகாட்டுதலையும் சுகமாக உணர்கிறார் ஆனந்த்.

ஒருகட்டத்தில் அழகரையும் ஆனந்த் பிரிய நேர்கிறது.

அது எத்தகைய தருணம்? லட்சியக் கனவான ‘பிகம் எ ஸ்டார்’ செயலியைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தாரா? நண்பர்களும் குடும்பத்தினரும் போற்றும்படியாக மாறினாரா என்று ஆனந்தின் வாழ்வு குறித்த ‘டைரிக் குறிப்பாக’ விரிகிறது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.

ஆட்டோகிராப் கதை என்பதால் காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட் என்று பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது இதன் திரைக்கதை.

நெகிழ்ச்சி எற்படுகிறதா?

ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைக் கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறையைக் காட்டுவதாக இப்படத்தின் கதை உள்ளது. ஆனால், திரைக்கதையில் அவரது இசையில் வெளியான பாடல்கள் நிறைய இடம்பெற்றதாகத் தெரியவில்லை. ‘காப்பிரைட்’ பிரச்சனைகளை மீறித் திரைக்கதையை  அடுத்தகட்டத்திற்கு நகர்த்த, அந்த உத்தியை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

நாயகன், நாயகி தொடங்கி அவரது நட்பு வட்டத்தில் இடம்பெற்றதாக காட்டப்படும் அனைவருக்கும் வேறு நடிகர் நடிகைகளைப் பயன்படுத்தியிருந்தால், இப்படம் வேறு மாதிரியான அனுபவத்தைத் தந்திருக்கும். ஆனால், பார்வையாளர்களுக்குக் குழப்பம் வரக்கூடாது என்று அந்த நடிகர் நடிகைகளே ‘இளமையாக’ தோன்ற முயற்சித்தது முன்பாதியை ரசிக்கவிடாமல் செய்திருக்கிறது.

ஆனந்த், லலித் இரு பாத்திரங்களும் இடைவேளைக்குப் பின் காட்டப்பட்ட விதமோ, அதனை ஏற்று நடித்தவர்களின் திறனோ குறை சொல்லும்படியாக இல்லை. ஆனால், அதே நடிகர்களையே இளமையாகக் காட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் அனந்த் ராம். அதுவே, இப்படத்தில் பெருந்தவறாகப் போயிருக்கிறது.

அதேநேரத்தில், சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதி அக்குறையைச் சரி செய்திருக்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பியாகவும் உள்ளது. குறைந்தபட்சம் இரண்டு, மூன்று இடங்களில் கண்களில் நீர் துளிர்க்கும் அளவுக்கு அக்காட்சிகள் இருக்கின்றன.

பள்ளி, கல்லூரி கால நினைவுகளைக் காட்டும் காட்சிகளில் மீசையை மழித்துக்கொண்டு, நீளமான தலைமுடி இருப்பதாகத் தோற்றம் தந்திருக்கிறார் அனந்த் ராம். அதற்கான ஒப்பனை முகத்தை விட்டு ஒரு ‘இன்ச்’ தனியே தள்ளி நிற்கிறது.

ஆதியாக வரும் ஆர்ஜே விஜய் தொடங்கிப் பலரும் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆனால், அதே கலைஞர்கள் இரண்டாம் பாதியில் ‘பாந்தமாக’ தோன்றியிருக்கின்றனர்.

முதல் பாதியில் குமரவேல், அவரது மனைவியாக வரும் விசாலினி, பாட்டியாக வரும் குளப்புல்லி லீலா, ஐஸ்வர்யா போன்றோர் உடன் டீக்கடை பாய் ஆக வருபவரும் நம்மை ஈர்க்கிறார்.

இரண்டாம் பாதியில் நாயகன் அனந்த் ராம், நாயகி பவானி ஸ்ரீ, லலித் ஆக நடித்தவர், அழகர் ஆக வரும் வினோத் மற்றும் நண்பர்களாக வரும் ஆர்ஜே விஜய் உள்ளிட்ட அனைவருமே நம் மனதை நெகிழ வைக்கின்றனர்.

இந்தப் படத்தில் சில காட்சிகளில் இர்பான் வந்து போகிறார். சில காட்சிகளில் கேபிஒய் பாலா வருகிறார். அவர்களைத் தொடர்ச்சியாகக் காண முடியாமல் போனதற்கு ‘கால்ஷீட் பிரச்சனைகள்’ காரணமாக இருக்கலாம்.

ஆனால், அவை படம் பார்க்கும்போது ‘அதிருப்தியை’ ஏற்படுத்துகின்றன. அவர்கள் இடம்பெற்றிருந்தால் சில நகைச்சுவை தருணங்கள் வாய்த்திருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது.

முதல் பாதியில் டிவியில் கிரிக்கெட் பார்த்தவாறே, ‘முறுக்கு கொடு’ என்று மனைவியைப் பார்த்து குமரவேல் பாத்திரம் வசனம் பேசுவதாக ஒரு காட்சி உண்டு. சில நிமிடங்கள் கழித்து, கிரிக்கெட் கனவை நனவாக்க முடியாமல் போனதை எண்ணி அப்பாத்திரம் வருந்துவதாக இன்னொரு காட்சி வரும்.

இரண்டுக்கும் இடையே சொல்லாமல் விட்ட பல காட்சிகளைத் தேக்கி வைத்த முகபாவனையுடன், இரண்டாம் பாதியில் குமரவேல் தோன்றியிருப்பார். அது போன்ற விஷயங்கள் இப்படத்தில் அருமையாகக் கையாளப்பட்டுள்ளன.

கிளைமேக்ஸ் காட்சி அப்படியே ‘சென்னை 600028’ ஐ நினைவூட்டுவதாக உள்ளது. அதற்கேற்ப, நாயகனின் வாழ்க்கை கதையை விமானப் பயணத்தில் கேட்பவராக இயக்குனர் வெங்கட் பிரபுவும் இதில் தலைகாட்டியிருக்கிறார்.

ஏ.ஹெச்.காஷிப்பின் இசையில் ‘ஆலாதே’, ’நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்’, , ‘ஓகே சொல்லிட்டா’, ‘தேடி தேடி போகிறேன்’, ‘வாரானே’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. இதர பாடல்கள் தியேட்டரில் காண்கையில் துருத்தலாகத் தெரியவில்லை.

போலவே பின்னணி இசையிலும் திருப்தி தருகிற ஒரு அனுபவத்தை வழங்குயிருக்கிறார் காஷிப்.

‘ஹேண்டி’ முறையில் படம்பிடிக்கப்பட்ட உணர்வை அனைத்து காட்சிகளிலும் ஏற்படுத்த விரும்பியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன். சில இடங்களில் அது நல்லதொரு உணர்வை உருவாக்குகிறது.

பென்னி ஆலிவர் இதில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். முன்பாதியில் வரும் ஆனந்தம் காலனி, பள்ளிப் பருவக் காட்சிகளைச் செறிவாக ‘கட்’ செய்யத் தவறியிருக்கிறார். பாத்திரங்களுடன் பார்வையாளர்கள் ஒன்ற வேண்டும் என்று நினைத்தது அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைப்பதாக உள்ளது.

ராகுல் இதில் கலை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். முன்பாதிக் காட்சிகளில் அவரது குழுவினரின் மெனக்கெடல் நன்றாகத் தெரிகிறது.

ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட சில விஷயங்கள் பெரிதாகத் திருப்தி தரவில்லை. குறிப்பிட்ட காட்சிகளுக்கு வடிவம் கொடுப்பதில் இயக்குனர் குழுவே திணறியிருப்பதாகவே அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனந்த் ராம் ஒரு இயக்குனராகத் தான் எடுக்க நினைத்ததைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், தான் எதிர்கொண்ட அனுபவங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு கதையில் தானே நாயகனாக நடிக்க வேண்டும் என்று நினைத்தது தான் தவறாகியிருக்கிறது.

’இயக்குனர் அந்தஸ்து போதும்’ என்று இதில் அவர் நடிக்காமல் தவிர்த்திருக்கலாம். இதனைச் சொல்வதால், அவரது நடிப்புத்திறனைக் குறை சொல்வதாக நினைத்துவிடக் கூடாது. இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு ‘ஓகே’ ரகமாகவே உள்ளது. ஆனால், அவ்வாறு செய்திருந்தால் இப்படத்தின் தாக்கம் வேறுமாதிரியானதாகக் கூட இருந்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், இந்த படத்தின் முதல் பாதி முழுக்க வேறு கலைஞர்களைக் கொண்டு நிறைத்திருக்கலாம்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், மிகச்சாதாரணமான வாழ்வனுபவங்களோடு, தான் விரும்பிய ஒரு நிலையை எட்டுவதையே காட்டுகிறது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. குறைகளைத் தாண்டி நிறைகளால் நம்மை அசத்துகிறது இப்படம். அது போதுமே என்பவர்களுக்குச் சிரித்தும் அழுதும் நெகிழ்ந்தும் மகிழ ஒரு வாய்ப்பினைத் தருகிறது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

சென்னைக்கு புதிய 100 பேருந்துகள்: தொடங்கி வைத்த உதயநிதி

ஹெல்த் டிப்ஸ்: லேடீஸ் ஸ்பெஷல்… பீரியட்ஸுக்கு முன்… தவிர்க்க வேண்டிய, சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு நிதியுதவி… நன்றி தெரிவித்த பினராயி

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்