Skip to main content

11 YEARS OF VVS... சிவகார்த்திகேயனை ‘ஸ்டார்’ ஆக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

 உதயசங்கரன் பாடகலிங்கம்

சில திரைப்படங்களில் பெரிதாகக் கதை என்ற ஒரு வஸ்து இருக்காது. அந்த காலகட்டத்தில் ’ட்ரெண்டிங்’கில் இருப்பவர்கள் யாரும் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். பிரமாண்டத் தயாரிப்புக்கு நேரெதிராக ரொம்ப ‘சிம்பிளாக’ இருக்கும். முகம் தெரிந்த நடிப்புக்கலைஞர்கள், கவனிப்பைப் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், புதுமுக இயக்குனர், புதிய தயாரிப்பு நிறுவனம் என்று ‘அனுபவ’ ஏணியில் ஏறத் தொடங்கியிருக்கும் பலர் ஒன்றிணைந்து அப்படத்தை ஆக்கியிருப்பார்கள்.

ஆனால், திரையில் தெரியும் ‘லைவ்லினெஸ்’ காரணமாக அப்படம் ரசிகர்களைக் குதூகலப்படுத்துவதாக இருக்கும். தியேட்டரில் கொண்டாட்டத்தை விதைக்கும். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்படியொரு மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு ஊட்டிய படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

பொன்ராம் இயக்கிய இப்படம்தான், ‘டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவராக’ அடையாளப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்தை தந்தது. சூரி - சிவகார்த்திகேயன் காம்பினேஷனை சிலாகிக்கச் செய்தது. மிக முக்கியமாக, சத்யராஜை நெடுநாட்களுக்குப் பிறகு காமெடி வேடத்தில் காண வைத்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் ஆகின்றன.

இருக்கு.. ஆனா இல்ல..!

’இந்த படத்துல கதை என்ன’ என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், ‘கதைன்னு ஒண்ணு இருக்கு.. ஆனா இல்ல’ என்று சொல்லும்விதமாகவே இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதுவே இந்தப் படத்தின் பலமாகவும் கருதப்படுகிறது.

திண்டுக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த சிவனாண்டியின் (சத்யராஜ்) மகள் லதா பாண்டி (ஸ்ரீ திவ்யா). பள்ளியில் படித்து வரும் அவர், அதே ஊரைச் சேர்ந்த போஸ் பாண்டியை (சிவகார்த்திகேயன்) சீண்டிக்கொண்டே இருக்கிறார். பள்ளியிலுள்ள ஒரு ஆசிரியைக்கு (பிந்து மாதவி) போஸ் பாண்டி காதல் கடிதம் கொடுக்கப்போவதைத் தடுக்கிறார். அதனால், தனது காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார் போஸ் பாண்டி.

என்ன ஆனாலும், பெரிதாக ‘சீரியஸ்னெஸ்’ காட்டாமல் நண்பன் கொடி (சூரி) உடன் ஊர் சுற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார் போஸ் பாண்டி. ’பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறேன்’ என்று ‘மொட்டை’ புகார் அனுப்புவது இருவரது வேலை.  அப்படித்தான், லதா பாண்டிக்கு நடக்கவிருந்த ‘குழந்தை திருமணத்தை’ இருவரும் தடுத்து நிறுத்துகின்றனர்.

அப்போது முதல் போஸ் பாண்டியைக் காதலிக்கத் தொடங்குகிறார் லதா பாண்டி. அடுத்த சில நாட்களுக்குள் அதனை அறிகிறார் போஸ் பாண்டி. பிறகு, இருவரும் மனதாரக் காதலிக்கின்றனர். அந்த விஷயம் சிவனாண்டிக்குத் தெரிய வருகிறது. அதையடுத்து சாதி, காதல் என்று பல விஷயங்களைக் காரணம் காட்டி இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறார்.

ஆனால் இருவரும் ‘நாங்கள் காவியக் காதலர்கள்’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றனர். இறுதியில் என்னவானது என்று சொல்லும் ‘வ.வா.ச.’ படத்தின் மீதி. இந்தப் படத்தின் திரைக்கதையானது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவனாண்டி ஊருக்குள் வருவதில் இருந்து தொடங்குவதாக அமைக்கப்பட்டிருக்கும். அதுவே இப்படத்தில் வரும் ‘காமெடி’ குறித்து நமக்குள் பல கேள்விகளை எழுப்பும். அதற்கு விடையளிக்கும்விதமாக கிளைமேக்ஸ் இருக்கும்.

வித்தியாசமான ‘காம்பினேஷன்’!

‘வ.வா.ச.’ படத்தின் யுஎஸ்பியே ‘சிவகார்த்திகேயன் - சூரி’யின் காமெடி காம்போ தான். இருவரும் ஒருவரையொருவர் வாரிக்கொள்ளும் விதமாக காமெடி கவுண்டர்களை உதிர்ப்பதும், பிறகு ஒன்றிணைந்து எதிராளிகளுடன் சண்டையிடுவதுமாக, இதிலுள்ள பல காட்சிகள் நம்மைத் தரையில் புரண்டு சிரிக்க வைக்கும்.

‘யப்பா பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துர்றியா’ என்று யார் கண்ணன் சிவகார்த்திகேயனிடம் கேட்பதும், பதிலுக்கு ‘இல்ல, நான் மாட்டையே மேய்க்க கூட்டிட்டு போறேன்’ என்று சூரியுடன் சேர்ந்து அதனை ஓட்டிச் செல்வதும், இன்றும் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்தும் காட்சி.

இது போக பஞ்சாயத்தில் ரீட்டாவின் ஆட்டம் வேண்டும் என்று சொல்வது உட்படப் பல காட்சிகள் இதிலுண்டு.
டி.இமானின் இசையில் அமைந்த ‘ஊதாகலரு ரிப்பன்’ பாடல், இப்படத்தைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. மிக முக்கியமாக, தவழும் குழந்தைகளுக்குக் கூட அப்பாடல் ரொம்பவும் பிடித்துப்போனது.

அப்பாடல் தவிர்த்து ’பாக்காத பாக்காத’, ’என்னடா என்னடா’ பாடல்கள் மெலடியாக ஈர்க்கத்தக்கவை என்றால், ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்றவை தியேட்டரில் ரசிகர்களைக் குத்தாட்டம் போட வைத்தன. அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் முணு முணுக்கும் வகையில் எளிமையாக வடித்திருந்தார் பாடலாசிரியர் யுகபாரதி.

அந்த பாடல்களுக்கான நடன அமைப்பும் கூட மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தன. பெரிதாக நடனம் தெரியாதவர் கூட, அப்பாடலுக்கு நடனமாடிவிட முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவற்றின் வடிவமைப்பு இருந்தது. அந்த எளிமை இப்படம் சார்ந்த வெவ்வேறு துறைகளிலும் இருந்ததுதான் இதன் சிறப்பு.

மிகச்சாதாரண மனிதர்களைக் காட்டும் பாத்திர வார்ப்பு, யதார்த்தம் தெறிக்கும் திரைக்கதை, அதனுள் சினிமாத்தனமான உள்ளடக்கம், நேர்த்தியான தொழில்நுட்ப உழைப்பு என்று செறிவாக அமைந்தது இப்படம்.
பாலசுப்பிரமணியமின் ஒளிப்பதிவு, அனைத்து வண்ணங்களையும் திரையில் வாரிக்குழைத்து வரைந்த ஓவியம் போல ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருந்தது.

விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பில் கதையோட்டம் திரையில் சீராகப் பரவி நின்றது. இப்படி ஒவ்வொன்றையும் தனித்தனியே சிலாகிக்கிற அளவுக்கு உள்ளடக்கம் அமைவதுதான் ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். அது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஒட்டுமொத்தமாக நிறைந்திருந்தது.

சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ‘ஸ்கிரீன்’ கெமிஸ்ட்ரி இதில் சிறப்பாக இருந்தது. மொட்டை ராஜேந்திரன், யார் கண்ணன், ஸ்வாமிநாதன், வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீரஞ்சனி, காதல் தண்டபாணி, தவசி, சுப்பிரமணியபுரம் ராஜா, ஹலோ கந்தசாமி, ஷாலு ஷம்மு என்று வெவ்வேறு படங்களில் சிறிய அளவில் ரசிகர்களை மகிழ்வித்த பல கலைஞர்கள் இதில் ஒன்றிணைந்து தோன்றினர்.

அது, இப்படத்தை வழக்கத்திற்கு மாறானதாகக் காட்டியது. அதேநேரத்தில், கமர்ஷியல் பட அம்சங்கள் மிக நேர்த்தியாகத் திரையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ பாணியில் இப்படத்தின் திரைக்கதையும் பிளாஷ்பேக்கில் நகர்வதாக அமைக்கப்பட்டிருந்தது. அது, படத்தின் இறுதியில் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

இன்றும் ரசிக்கலாம்!

யூடியூபில் நாம் நினைத்த நேரத்தில் விரும்பிய பாடலை, காட்சியை, படத்தை ரசிக்கிற சூழல் இன்றிருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் வானொலியில் ஒலிபரப்பாகிற பாடல், வசனங்களைக் கேட்டவுடன் ‘ரேடியோவுல வந்துருச்சு’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

தொலைக்காட்சிகள் பெருகிய காலகட்டத்தில், ரிமோட் பட்டன் தேயும் அளவுக்கு சேனல் மாற்றி மாற்றிப் பார்த்தார்கள். அப்படிப்பட்ட அந்தஸ்தை அடைய, எல்லா காலத்திலும் ரசிக்க, அப்படமோ, பாடலோ, காட்சியோ ‘இறவாத்தன்மை’ கொண்டதாக இருக்க வேண்டும்.

சிலவற்றுக்குத்தான் அந்த அந்தஸ்தைக் கொடுப்பார்கள் ரசிகர்கள். பொன்ராம் இயக்கிய ‘வ.வா.ச.’ படத்துக்கும் அதனைத் தந்தார்கள். இப்படம் வெளிவந்த காலகட்டத்தில், இது ஆணவக்கொலை பிரச்சனையை நகைச்சுவையாகக் காட்டுகிறது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

அது போன்ற எதிர்க்கணைகளை மீறி, ‘கல்ட்’ அந்தஸ்தை பெற்ற கமர்ஷியல் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம். ‘தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் ‘கேமியோ’வாக இடம்பெறும் காட்சிக்கு தியேட்டரில் கிடைக்கும் கைத்தட்டல்களுக்கு, ஒருகாலத்தில் விதையிட்ட படம் என்ற பெருமையும் இதற்குண்டு.

இது போன்ற இன்னொரு படத்தை பொன்ராம் எப்போது தருவார்? மீண்டும் சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி இணையுமா என்ற கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இப்படத்தின் வெற்றிக்குச் சான்று. போலவே, இது போன்று எளிமையும் அழகியலும் நிறைந்த கதை சொல்லலுடன் திரைப்படங்கள் வெளியாவது பல புதிய கலைஞர்களை ரசிகர்கள் அடையாளம் காணச் சிறந்ததொரு வழியாகவும் இருக்கும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாற்றுத்திறனாளி சமூகத்தை மகாவிஷ்ணு காயப்படுத்தினார் : ஆசிரியர் சங்கர்

அரசு பள்ளிகளில் தனியார் அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த தடை!

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக