Skip to main content

மது வடலரா 2: விமர்சனம்!

   உதயசங்கரன் பாடகலிங்கம்

மூளையைக் கழற்றி வைக்கத் தயாரா?!

டெலிவரி பாய் ஆக வேலை செய்துவரும் இரண்டு சாமானியர்கள், பெருநகரத்தில் நிகழும் குற்றமொன்றில் தெரியாமல் மாட்டி, விழி பிதுங்கி, இறுதியில் தங்களை இக்கட்டில் மாட்டிவிட்டவர்களைக் கண்டறிந்து போலீசாரிடம் ஒப்படைப்பதைச் சொன்னது வது மடலரா தெலுங்கு திரைப்படம்.

இது 2019இல் வெளியானது. இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீ சிம்ஹா, சத்யா, வெண்ணிலா கிஷோர், அஜய் ஆகியோரோடு இதில் சுனில், ஃபரியா அப்துல்லா, ரோகிணி, ஜான்சி உட்படப் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை எழுதி இயக்கிய ரித்தேஷ் ராணா, இரண்டாம் பாகத்தைத் தந்திருக்கிறார்.

சரி, இப்படமும் முதல் பாகம் போலவே சிரிப்போடு ஆக்‌ஷனையும் த்ரில்லையும் அள்ளித் தருகிறதா?

தொடரும் ஏமாற்று வேலை!

டெலிவரி பாய் ஆக வேலை பார்த்த பாபு (ஸ்ரீ சிம்ஹா), யேசு (சத்யா) இருவரும் தற்போது ஸ்பெஷல் ஏஜெண்ட்களாக ஹி (HE) டீமில் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் கடத்தல் வழக்குகளில் மட்டுமே அவர்கள் இருவரும் ஈடுபடுகின்றனர்.

கடத்தல்காரர்களை முன்னரே கண்டறிந்து, அவர்கள் பணம் கேட்பது போல நடித்துச் சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவற்றில் கொஞ்சத்தை தனியே லவட்டிவிட்டு, கடத்தப்பட்ட நபரோடு சொச்ச பணத்தை மேலதிகாரிகளிடம் ஒப்படைப்பதே இவர்களது வேலையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தாங்கள் ஏற்கனவே போலீசிடம் பிடித்துக்கொடுத்த தேஜஸ்வி (அஜய்) தற்போது ஆகாஷ் என்ற பெயரில் ஒரு சொகுசு பார் நடத்தி வருவதைக் காண்கின்றனர். இவர்களைப் பார்த்தவுடன் அவரும் டென்ஷன் ஆகிறார்.

அந்த பாரில், சினிமா நடிகர் ரவி தேஜாவையும் (வெண்ணிலா கிஷோர்) அவர்கள் காண்கின்றனர். தங்களது கதையைப் படமாக எடுத்து, அதில் அவர் ஹீரோவாக நடித்துப் பெயரும் புகழும் பெற்றுவிட்டதாகப் புலம்புகின்றனர். மது மயக்கத்தில் தன்னை மறந்து அந்த இடத்தில் அமர்ந்திருக்கின்றனர்.

அதற்கடுத்த நாள், தாமினி என்ற மாவட்ட மாஜிஸ்திரேட் பாபுவையும் யேசுவையும் ரகசியமாக வரவழைக்கிறார். தனது மகள் காணாமல் போய்விட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் கூறுகிறார்.

அதேபோல, தாமினி சொன்ன அடையாளங்களை வைத்து கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்கின்றனர் இருவரும். அவர்களை அடித்து ஓரிடத்தில் அடைத்து வைக்கின்றனர்.

வழக்கம்போல, பணம் கேட்டு தாமினியை ஏமாற்றுகின்றனர். அவரும் பணம் கொடுக்கிறார். அதனை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தால், அந்தப் பெண் அறையில் இல்லை. அவர்களைக் கன்னாபின்னாவென்று வறுத்தெடுக்கிறார் தாமினி.

அதனைத் தொடர்ந்து, தங்களை ஏமாற்றிய நபரைப் பின்னியெடுக்க வேண்டுமென்று இருவரும் திட்டமிடுகின்றனர். அவர்கள் நினைத்தது போலவே, ஒரு நபர் போன் செய்கிறார். தான் சொல்லும் லாட்ஜுக்கு வரச் சொல்கிறார். அங்கு மூன்றாவது மாடியில் ஏழாம் எண் அறையில் தான் இருப்பதாகச் சொல்கிறார்.

பாபு, யேசு இருவரும் அந்த அறைக்குச் செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து இன்னொரு நபர் அங்கு நுழைகிறார். அவர், சொகுசு பார் அதிபர் ஆகாஷ். இருவரையும் கண்டதும் அவர் அதிர்ச்சி அடைகிறார். அது நிகழ்ந்து முடிவதற்குள், அவரது உடலைக் குண்டு ஒன்று துளைக்கிறது.

அந்த நேரத்தில் யேசுவின் கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆனால், அதில் இருந்து அந்த குண்டு வெளியேறவில்லை. அதேநேரத்தில், அந்த அறையில் வேறு நபர்களும் இல்லை.

என்ன செய்வதென்று தெரியாமல், பாபுவும் யேசுவும் அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் பாபுவும் யேசுவும் அலுவலகத்திற்குச் செல்கின்றனர். அங்கு, தாமினி என்ற பெயரில் வேறொரு பெண் அமர்ந்திருக்கிறார். அவர், தனது மகள் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆவதாகச் சொல்கிறார். ஆனால், அது பாபுவும் யேசுவும் கண்ட பெண்மணி அல்ல.

அந்த அதிர்ச்சியை அவர்கள் தாங்கிக்கொள்வதற்குள், தொலைக்காட்சி செய்தியொன்றில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு பாபுவும் யேசுவும் சென்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. புகார் கொடுக்க வந்த தாமினி சொன்ன அடையாளங்களோடு, அந்தப் பெண்ணின் உருவம் இருக்கிறது.

அடுத்த நொடியே, அவர்கள் இருவரையும் பிடிக்க உத்தரவிடுகிறார் ஹி டீம் தலைவர் ரத்னா (ரோகிணி). ஆனால், அவர்கள் வாசலை நோக்கி ஓடுகின்றனர். அதனுள், தாமினி காணாமல் போனதாகச் சொன்ன அவரது மகள் கழுத்தறுபட்ட நிலையில் பிணமாகக் கிடக்கிறார்.

அந்தப் பெண்ணைக் கொலை செய்தது யார்? ஆகாஷை தாங்கள் கொன்றது போல வீடியோவை எடுத்தது யார்? தங்களது காருக்குள் தாமினியின் மகள் சடலம் வந்தது எப்படி? கடத்தல்காரர்களையும் ஹி டீமையும் தாங்கள் ஏமாற்றுவது எதிராளிக்கு எப்படித் தெரிந்தது?
இதற்கான கேள்விகளை பாபுவும் யேசுவும் கண்டறிந்தார்களா என்பதைச் சொல்கிறது மது வடலரா 2வின் மீதிப்பாதி.

சிரித்து உருளலாம்!

சந்தானம், சதீஷ், யோகிபாபுவோடு வடிவேலு, விவேக் எல்லாம் கலந்து செய்தாற்போல இருக்கிறார் சத்யா. அவரது காமெடி டைமிங் தான் இந்தப் படத்தின் பெரும்பலம். தியேட்டர் சீட்டில் இருந்து சரிந்து கீழே விழுந்து உருளலாம், சிரிக்கலாம் என்கிற அளவுக்கு இருக்கிறது அவரது காமெடி.

அதுவும், தொண்ணூறுகளில் இருந்த சிரஞ்சீவியைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு டான்ஸ் ஆடுகிறார். அதில் சத்யாவிடம் தென்படுவது மிமிக்ரி கலைஞன் அல்ல; அசல் சிரஞ்சீவி ரசிகன். அந்தளவுக்கு அவரது டான்ஸ் அட்டகாசமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் நாயகன் ஸ்ரீசிம்ஹா. தம்பி இன்னும் நடிப்பு வரலை என்று சொல்வது போல, ஒரே முகபாவனையோடு பல காட்சிகளில் வந்து போயிருக்கிறார். ஆனாலும், முதலுக்கு மோசமில்லை என்பது போல ஒரு பெர்பார்மன்ஸ்.

நாயகியாக இல்லாவிட்டாலும், ஒரு பாத்திரமாக வந்து போகும் ஃபரியா அப்துல்லா பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்பது போல திரையில் உலாவுகிறார். முன்னணி நாயகர்களோடு சேர்ந்து நடிக்கிறேன் பேர்வழி என்று கவர்ச்சி தாரகையாக வலம் வருவதற்குப் பதிலாக, நடிக்க வாய்ப்புள்ள பாத்திரங்களைத் தேடித் தேர்ந்தெடுப்பது கண்டிப்பாக அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும்.

இவர்கள் தவிர்த்து, வழக்கம் போல வெண்ணிலா கிஷோர் சிக்சர் அடித்திருக்கிறார். சினிமா ஹீரோக்கள் பற்றிய செய்திகளை அப்படியே காட்சிகளாக்கவும், அதில் நடிக்கவும் துணிவு வேண்டும். அது, கிஷோரிடம் நிறையவே இருக்கிறது.

போலீஸ் ரகசிய விசாரணை அமைப்பின் தலைவராக ரோகிணியைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவம். இது, அதற்கான தொடக்கமாக இருக்கட்டும்.

இன்னும் அஜய், சுனில், ஸ்ரீனிவாச ரெட்டி உட்பட சுமார் ஒரு டஜன் கலைஞர்கள் இதில் வந்து போயிருக்கின்றனர்.

எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் ரித்தேஷ் ராணா, ஒன்லி மேஜிக் நோ லாஜிக் என்ற யோசனையோடு இப்படத்தைத் தந்திருக்கிறார். அது வொர்க் அவுட் ஆகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஆக இருந்தாலும் தொடக்கம் முதல் இறுதி வரை சிரித்து மகிழலாம் எனும் வகையிலேயே இப்படம் அமைந்திருக்கிறது. அந்த சிரிப்புக்காக, இதிலிருக்கும் லாஜிக் குறைபாடுகளைப் புறந்தள்ளிவிடலாம்.

இப்படத்தின் பெரிய ப்ளஸ், கலர்ஃபுல்லான காட்சியாக்கம். அதற்காக ஒளிப்பதிவாளர் சுரேஷ் சாரங்கம், படத்தொகுப்பாளர் நார்னி ஸ்ரீனிவாஸ், படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் கூட்டணி அரும்பாடு பட்டிருக்கிறது.

காட்சியின் தன்மைக்கு ஏற்ப களங்கள் மாறினாலும், கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்திருப்பது வழக்கமான தெலுங்கு மசாலா படம் பார்க்கும் எண்ணத்தை அதிகப்படுத்துகிறது.

அதேநேரத்தில், திரைக்கதையோட்டத்தில் க்ளிஷேக்கள் கிண்டலடிக்கப்பட்டிருப்பதும், வழக்கத்திற்கு மாறான திருப்பங்கள் இடம்பெற்றிருப்பதும், ஒரு ஜாலி ரைடு ஆக திரையனுபவத்தை ஆக்குகின்றன. காலபைரவாவின் பாடல்களும் பின்னணி இசையும் துள்ளலை உருவாக்குகின்றன.

மொத்தத்தில், கேலி ப்ளஸ் ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் நண்பர் குழாமிற்கு ஏற்றதொரு படம் இந்த மது வடலரா 2. போதை ஸ்டாம்ப், மது பாட்டில் குவியல், ஆபாச வீடியோ விவகாரம் போன்றவை இக்கதையில் ஒரு அங்கமாக வருகின்றன.

அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், இது வன்முறையோ, பயங்கரமோ இடம்பெறாத ஒரு தெலுங்கு படமாக இருக்கும். நொடிக்கொரு முறை சிரிக்கலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பு.

மேற்சொன்னவாறு இப்படத்தை ரசிக்க, தியேட்டருக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே மூளையைக் கழற்றிக் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். டிக்கெட் எடுப்பதற்கு முன்பாகவே, அந்த நிபந்தனையை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அதற்குத் தயார் என்றால், யாகூ என்ற உற்சாகக்குரலோடு மது வடலரா 2வை நீங்கள் பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

லப்பர் பந்து – கிரிக்கெட் வீரர் வருண் கொடுத்த சர்டிபிகேட் : அப்படி என்ன இருக்கு?

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஹஸ்தம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் 30 சதவிகிதம் கொடுக்கும் தென் மாநிலங்கள்… தமிழகத்தின் பங்கு எவ்வளவு?

ஒரே சமயத்தில் வெடித்த பேஜர்கள்: 9 பேர் பலி… 2,500 பேர் படுகாயம்!

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக