உதயசங்கரன் பாடகலிங்கம்
தாய்மார்கள் காண வேண்டிய படம்!
ஒரு திரைப்படம் என்றால் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டம் தென்பட வேண்டும். ஹீரோயிசம் தூக்கலாக தெரிய வேண்டும். ஒவ்வொரு ஷாட்டிலும் அழகியல் அம்சங்கள் நிறைந்தாக வேண்டும். பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் ஏதேனும் ஒரு அம்சம் திரைக்கதையில் வந்துகொண்டே இருக்க வேண்டும். கண்டிப்பாக, அவை ‘க்ளிஷேக்களாக’ இருக்கக் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகளைக் கையிலெடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் ரசிகர்கள் நுழைய ஆரம்பித்தபிறகு, குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு குடும்பத்தோடு பார்க்கத்தக்க திரைச்சித்திரங்களைக் காண்பது அருகிவிட்டது.
அப்படியொரு சூழலில், முழுக்க ஒரு குடும்பத்தையும் அதிலிருக்கும் ஒரு சிறுவனின் ஏக்கத்தையும் பிரதிபலிக்கிற வகையில் அமைந்திருக்கிறது தெலுங்குப் படமான ‘35’. ‘சின்ன கத காது’ என்பது இந்த டைட்டிலுடன் ‘டேக்லைன்’ ஆக உள்ளது. அதற்கு ‘சின்ன விஷயம் கிடையாது’ என்று பொருள் கொள்ளலாம்.
டைட்டிலையும் படத்தில் வரும் சிறுவனையும் இணைத்துப் பார்த்தால், தேர்வில் வெற்றி பெற முடியாமல் அவன் தவிப்பதுதான் இப்படத்தின் கதையா என்ற கேள்வி தோன்றும். உண்மையில், அதுதான் இப்படத்தின் மையக்கருவா? அந்த சிறுவன் தனது பிரச்சனையில் இருந்து விடுபட்டானா? என்ன பதில் சொல்கிறது ‘35’?
சின்ன விஷயம் கிடையாது!
திருப்பதியில் வசித்து வருகின்றனர் சரஸ்வதி - பிரசாத் (நிவேதா தாமஸ், விஸ்வதேவ் ரச்சகொண்டா) தம்பதியர். இவர்களுக்கு அருண் (அருண்தேவ் பொதுலா), வருண் (அபய் சங்கர்) என்று இரண்டு மகன்கள்.
பத்தாம் வகுப்பில் ‘பெயில்’ ஆன சரஸ்வதி, அதனால் மேற்கொண்டு ஏதும் படிக்கவில்லை. போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனர் பணி பிரசாத்துக்குக் கிடைக்க, சரஸ்வதியை அவர் திருமணம் செய்துகொள்கிறார்.
பிரசவ காலத்தில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு அருணைப் பெற்றெடுக்கிறார். அடுத்ததாக, வருணும் பிறக்கிறார்.
வருண் படிப்பில் சிறந்து விளங்க, அருண் கணிதத்தில் படுபயங்கரமாகத் தடுமாறுகிறார். அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல, அது குறைவதாக இல்லை.
சரஸ்வதியின் சகோதரர் அர்ச்சகராக இருக்கிறார். அதனால், திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடத்தும் வேதாகமப் பள்ளியில் அருணைச் சேர்த்துவிடலாம் என்று சரஸ்வதி, பிரசாத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சரஸ்வதிக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால், பிரசாத் அந்த விஷயத்தில் எந்த நிலைப்பாடும் இல்லாதவராகத் தொடர்கிறார்.
பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும் அருணுக்கு பவன் என்றொரு நண்பன் உண்டு. இருவரும் எல்கேஜி முதல் நட்புடன் இருந்து வருகின்றனர்.
எந்நேரமும் கழுத்தைக் கட்டிக்கொண்டு திரிந்தாலும், கணிதத்தைப் பொறுத்தவரை இருவரும் இரு வேரு திசைகளில் நிற்பார்கள். பவன் 100 மதிப்பெண் எடுத்தால், அருண் ‘பூஜ்யம்’ எடுப்பார்.
புதிதாகப் பள்ளிக்கு வரும் கணித ஆசிரியர் சாணக்யா (பிரியதர்ஷி) கண்ணில் முதலில் படுவது அவர்கள் இருவரது நட்புதான். மாணவர்களை அவர்கள் வாங்கும் கணித மதிப்பெண்களை வைத்து அழைக்கும் வழக்கமுள்ள அவர், அருணை ‘ஜீரோ’ என்றே விளிக்கிறார்.
தான் வகுப்பில் நுழைந்த அன்றே, அருணை பவனிடம் இருந்து பிரித்து கடைசி பெஞ்சில் உட்கார வைக்கிறார். எதற்கெடுத்தாலும் சந்தேகம் கேட்கும் காரணத்தால், தினமும் அவனை பெஞ்சின் மீது நிற்க வைக்கிறார்.
’பாடப்புத்தகத்தில் இருப்பதைப் படி’ என்று சொல்கிற ஆசிரியர்களுக்கு, ‘டவுட்’ கேட்கும் அருணைக் கண்டதும் கோபம் தலைக்கேறுகிறது. அதில் உச்சம் தொடுகிறார் சாணக்யா.
சாணக்யா எரிச்சல்படுத்துவதற்குப் பதிலடியாக, அவரது பைக்கில் அருணும் பவனும் கைவரிசை காட்டுகின்றனர். ஒருநாள் அவருக்கு விஷயம் தெரிய வருகிறது. அதையடுத்து, பவனை வேறோரு பள்ளியில் சேர்க்கின்றனர் அச்சிறுவனின் பெற்றோர்.
அது மட்டுமல்லாமல், பிரசாத்தை அழைத்து ‘அருணை ஐந்தாம் வகுப்பில் படிக்க வைத்தால் தான் நல்லது’ என்கிறார். தலைமையாசிரியருக்கு (கே.பாக்யராஜ்) அம்முடிவில் விருப்பம் இல்லாதபோதும், வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.
அதையடுத்து, தம்பி வருண் படிக்கும் ஐந்தாம் வகுப்பில் சேர்கிறார் அருண். அந்த வகுப்பில் எவரும் அருணோடு முகம் கொடுத்து பேசுவதில்லை. வருணும் பேசக் கூடாது என்று நிபந்தனை விதிக்கின்றனர். இந்த நிலையில், தலைமையாசிரியரின் பேத்தி கிரண் அப்பள்ளியில் சேர்கிறார்.
வந்த முதல் நாளே, கடைசி பெஞ்சில் அருணோடு சேர்ந்து அமர்கிறார். அவரோடு நட்பு பாராட்டத் தொடங்குகிறார். அச்சிறுமியின் இயல்பான குணம் அருணைக் கவர்கிறது. அப்பெண் கேட்டதைச் செய்வதுதான் தனது நட்புக்கு அழகு என்று நினைக்கிறார்.
ஒருமுறை ‘கல்விச்சுற்றுலா செல்லும் தங்களோடு சாணக்யா வரக்கூடாது என்று கிரண் நினைக்க, அதற்காக அவரது கண்ணாடியைத் திருடி உடைக்கிறார் அருண். அதன் காரணமாக, கண்ணாடி அணியாமல் பைக் ஓட்டும் சாணக்யா, ஒரு விபத்தில் சிக்குகிறார்.
சுற்றுலாவின்போது கிரணிடம் இதனை அருண் சொல்ல, ஒரு சிறுவன் அதனைக் கேட்டுவிடுகிறான். விஷயம் தலைமையாசிரியர் வரை போகிறது. அருண் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இந்த நிலையில், அருணை மீண்டும் பள்ளியில் சேர்க்க கிரணும் வருணும் முயற்சிக்கின்றனர். அதற்காக இதர மாணவர்களையும் ஒன்றிணைக்கின்றனர். தலைமையாசிரியரும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கிற நிலைமையில், ‘ஆண்டு இறுதித் தேர்வில் கணித பாடத்தில் 35 மதிப்பெண்களை அருண் எடுத்துவிட்டால் மேற்கொண்டு இப்பள்ளியிலேயே படிக்கலாம்’ என்று நிபந்தனை விதிக்கிறார் சாணக்யா.
அருண் அந்த சவாலை ஏற்றாரா, வெற்றி பெற்றுக் காட்டினாரா, இந்தக் கதையில் சரஸ்வதியின் பங்கு என்ன என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
எப்போதும் கணிதத்தில் ‘பூஜ்ய’ மதிப்பெண் பெறும் ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதற்கான ‘35’ மதிப்பெண்களைப் பெறுவதென்பது நிச்சயம் சின்ன விஷயம் கிடையாது. அதனை ரசிகர்கள் புரிந்துகொண்டு, கதையோடு இணைந்து பயணிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது இதன் திரைக்கதை.
இப்படத்தில் பிரசாத் கதாபாத்திரம் அவ்வப்போது ‘இது சின்ன கத காது’ என்ற வசனத்தை உதிர்க்கிறது. அவ்வசனம் கிளைமேக்ஸிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது அழகு.
அற்புதமான காட்சியனுபவம்!
‘35’ படத்தை ஏன் காண வேண்டும் என்ற கேள்விக்கு, ‘நிவேதா தாமஸுக்காக’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு, படத்தைத் தன் தோளில் தாங்கியிருக்கிறார் மனுஷி.
குண்டான உடல்வாகு, பூரிப்பைக் காட்டும் கன்னக் கதுப்புகள், கணவன் மீது காதலையும் குழந்தைகள் மீது பாசத்தையும் கொட்டுகிற கண்கள் என்று ‘குடும்பமே கதி’ எனக் கிடக்கிற ஒரு சாதாரண பெண்ணை நம் கண் முன்னே காட்டியிருக்கிறார்.
இயலாமை, விரக்தி, கோபம், ஆத்திரம், சாந்தம், புன்னகை என்று விதவிதமாகப் பல உணர்ச்சிகளை ‘க்ளோஸ் அப்’களில் அவர் வெளிப்படுத்துகிறபோது, ஆயிரம் முத்தங்களைக் காற்றில் பறக்கவிடலாம் போலிருக்கிறது. இப்படத்திற்காக அவர் பெறும் விருதுகளைக் காட்டிலும், ரசிகர்களின் கைத்தட்டல்களும் பாராட்டுகளும் நிச்சயம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும்.
இந்தப் படத்தில் நிவேதாவுக்கும் நாயகன் விஸ்வதேவுக்கும் ஒப்பனை செய்த கலைஞர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். காரணம், அவர்கள் முகங்களே திரையில் ஆயிரம் கதைகள் சொல்கின்றன.
நாயகன் விஸ்வதேவ், வழக்கமான குடும்பத்தலைவனாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கிறார். மனைவி தன் பேச்சை மதிக்கவில்லை என்றுணர்ந்து கோபப்படுகிற இடத்திலும் சரி, மனைவியின் வைராக்கியத்தைக் கண்டு ரகசியமாகச் சிலாகிக்கிற இடத்திலும் சரி, அசத்தலான நடிப்பைத் தந்திருக்கிறார்.
சிறுவர்கள் அருண்தேவ் பொதுலா, அபய் சங்கர் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். அதுவும் ஏக்கத்தோடு திரிகிற காட்சிகளில் அருண்தேவ் நம்மை வியக்க வைக்கிறார். போலவே, கிரண் ஆக நடித்துள்ள சிறுமியும் ரசிக்க வைக்கிறார்.
இந்தப் படத்தில் வில்லன் என்றால், அது ஆசிரியராக வரும் பிரியதர்ஷி தான். வழக்கமாக, சில தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கும் இவர், இதில் ரொம்பவே சீரியசான ஒரு பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். கிட்டத்தட்ட ‘தண்ணீர்மாதன் தினங்கள்’ படத்தில் வரும் வினீத் சீனிவாசனை நினைவூட்டியிருக்கிறார்.
கௌதமி, பாக்யராஜ் என்று தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த நட்சத்திரங்களும் இப்படத்தில் உண்டு. இவர்கள் தவிர்த்து நிவேதாவின் சகோதரராக வருபவரும் சில காட்சிகளில் வந்து ‘கிச்சுகிச்சு’ மூட்டுகிறார்.
அருணுடன் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பில் படிப்பவர்களாக வரும் குழந்தைகளில் சிலருக்கும் இப்படத்தில் முக்கிய இடம் தரப்பட்டிருக்கிறது.
நடுத்தரக் குடும்பத்து வீடு, வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றைச் சுற்றி திரைக்கதை வலம் வந்தாலும், திரையில் சலிப்பு ஏற்படாதவாறு காட்சிகளை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி.
லதா நாயுடுவின் தயாரிப்பு வடிவமைப்பானது, குழந்தைகள் உலகுக்குப் பெரியோரும் சென்று பார்க்கத்தக்க வகையில் காட்சிகளுக்கான களத்தினைக் காட்டுகிறது.
ஆங்காங்கே சில இடங்களில் பிளாஷ்பேக் வந்தாலும், கதையைக் குழப்பமின்றிச் சொல்வதில் கவனம் காட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் டி.சி.பிரசன்னா.
இசையமைப்பாளர் விவேக் சாகர், பின்னணி இசையில் முழுக்க ‘கர்நாடக இசைக்கச்சேரி துணுக்கை’ கேட்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், அவை காட்சிகளுடன் பொருந்தி நிற்பது சிறப்பு. பாடல்களும் கூட மெலடி ராகங்களாகவே இருக்கின்றன.
இப்படத்தின் டிஐ பணி சிறப்புக்குரியதாக உள்ளது. படம் முழுக்கப் பெரிதாக வண்ணச் சிதறல், விலகல் இல்லாமல் நம் மனநிலையைக் கதையோடு ஒன்ற வைக்கும் வகையில் இருக்கிறது.
புதுமுக இயக்குனர் நந்த கிஷோர் இமானி, ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக நகரும் படமொன்றைத் தந்திருக்கிறார். இது நிச்சயம் சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால், பல உலகப்படங்கள் இந்த ‘மேஜிக்’கை செய்து தான் திரைப்பட ஆர்வலர்களைத் தம் வசப்படுத்தியிருக்கின்றன.
’35’ தரும் காட்சியனுபவம் புதிது என்று சொல்ல முடியாது தான். ஆனால், அது நம்மை இரண்டரை மணி நேரம் மெய்மறக்க வைக்கிறது. அருண் என்ற சிறுவன் கணிதத்தில் 35 மதிப்பெண் வாங்கிவிட மாட்டானா என்று அவனது தாய் ஏங்குவது போன்று நம்மைத் தவிப்பில் ஆழ்த்துகிறது.
’எதையும் கேள்விக்குட்படுத்துகிற அந்த குழந்தை மனதுக்கு, ஏன் கணிதம் மட்டும் பிடிபடுவதில்லை’ என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்கிற நிலைக்குக் கொண்டு வருகிறது. அதுவே இப்படத்தின் வெற்றி.
தியேட்டரில் காணலாம்!
‘டிராமா’ வகைமை படங்கள் என்றாலே தொலைக்காட்சியில், ஓடிடியில் பார்க்கலாம் என்ற மனநிலை பொதுவாக உள்ளது. நிச்சயமாக, அப்படங்களில் பிரமாண்டமான காட்சியமைப்புகள் இல்லை தான். ஆனால், உங்களைக் கண்ணீரில் நனைய வைக்கிற காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். வெளிச்சத்தில் அழ வெட்கப்படுகிறவர்களுக்கு, தியேட்டர்கள் தான் சரியான சாய்ஸ். எத்தனையோ தியேட்டர்களில் அப்படிப் படிந்துபோன கண்ணீரின் சாரம் இன்றும் இருக்கிறது.
சிரிப்பது, பூரிப்பது, உக்கிரம் கொள்வது, உத்வேகப்படுவது, காதலிலும் காமத்திலும் திளைப்பது போலவே தியேட்டரில் அழுவதும் இயல்பான ஒன்று. பல நல்ல படங்கள் அதனைச் சாதித்திருக்கின்றன. ‘35’ படமும் அப்படியான ஒன்று.
இக்கதையில் ‘லாஜிக்’ சார்ந்த கேள்விகள் எழ வாய்ப்புகள் இருந்தபோதும், நம் மனம் அத்திசையில் செல்வதில்லை. ஏனென்றால், இப்படம் அருண் என்ற குழந்தை மட்டுமல்லாமல், அவனது தாயும் தனது மட்கிப்போன கனவுகளைப் புதுப்பித்துக்கொள்வதைப் பேசுகிறது. அந்த வகையில், இன்றைய தாய்மார்கள் காண வேண்டிய படமிது.
‘ஸ்கூல்ல படிக்கலைன்னா வைதீகம் இருக்கு’ என்பது போன்ற வசனங்கள் கொஞ்சம் இடர்ப்பாட்டினை ஏற்படுத்தினாலும், ஒரு சாதாரண குடும்பத்தை ‘ட்ரோன்’ மூலம் காண்பது போன்ற அனுபவத்தைத் தரும் இப்படம். நிவேதா, விஸ்வதேவ், அருண் தேவ், அபய், பிரியதர்ஷி போன்ற அதிகப் பிரபலம் இல்லாத கலைஞர்களைக் கொண்டு, யதார்த்தமான காட்சிகளுடன் சிறப்பானதொரு திரைப்படைப்பைக் காண முடியும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறது.
அதற்காக, புதுமுகம் நந்தகிஷோர் இமானிக்கு ஒரு பூங்கொத்தைப் பரிசளிக்கலாம். ஓடிடியில் இப்படம் வெளியாகும்போது, இதன் தமிழ் பதிப்பைக் காண முடியும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
சென்னையில் பிஸ்கட் விநாயகர்: கிருஷ்ணகிரியில் இந்துக்களுக்கு விருந்து கொடுத்த இஸ்லாமியர்கள்!
இங்கிலாந்து வீரர் ஓலி படைத்த விசித்திர சாதனை… சச்சின் கூட அந்த சாதனை செய்யல!
வக்ஃபு மசோதா: மத்திய அரசு உண்மைகளை மறைப்பது ஏன்? – ஆ.ராசா கேள்வி!
சிகிச்சைக்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளாரா? – எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி
‘கோட்’ படத்தில் விஜயகாந்த்… மெர்சலான விஜய பிரபாகரன்
மூடநம்பிக்கை விதைத்தவரை ஓட ஓட விரட்டிய தமிழாசிரியர் – யார் இந்த சங்கர்?
Comments
Post a Comment