அமரன் திரைப்படம் நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 4) வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன்.
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
முதல் 3 நாளில் உலகளவில் 100 கோடி வசூலித்த இத்திரைப்படம், இதுவரை சுமார் 300 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமரன் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே படத்தின் ஒரு காட்சியில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு போன் நம்பரை எழுதி கொடுப்பார். அந்த நம்பர் உண்மையில் ஒரு பொறியியல் மாணவர் வாகீசன் என்ற பொறியியல் மாணவரின் மொபைல் எண்.
இத்திரைப்படத்தை கண்ட பலரும் தனக்கு தொடர்ந்து கால் செய்து வருவதாகவும், படம் வெளியானது முதலே தன்னால் தூங்கவோ படிக்கவோ வேலை செய்யவோ முடியவில்லை என்றும் கூறி பட நிறுவனத்திடம் 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு படத்தை தயாரித்த ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதற்கு குறிப்பிட்ட காட்சியை நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், அந்த காட்சி நீக்கப்படாமல், படத்தை நாளை ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்த நிலையில் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ’அமரன் திரைப்படத்தில் தன்னுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். எனது எண்ணை அனைத்து ஆவணங்களுடனும் இணைத்துள்ளதால் அதனை மாற்ற முடியாது. சினிமாவில் வரும் காட்சிகளால் தனிமனிதர்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை அனுமதி வழங்குவதற்கு முன் தணிக்கைத் துறை உறுதி செய்ய வேண்டும்.
அதனால், தீர்ப்பு வரும் வரை அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும். அமரன் படத்துக்கான தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தெரிந்தே கைபேசி எண்ணை பயன்படுத்தி, தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் ரூ.1.10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்" என வாகீசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்..
கிறிஸ்டோபர் ஜெமா
இடைத்தேர்தல் போல வெள்ள நிவாரண பணி: திமுகவோடு மீண்டும் உரசும் ஆதவ் அர்ஜுனா
சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!
Comments
Post a Comment