புரிதல் இல்லாமல் விமர்சனம்!
தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றம் காரணமாக அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு முன்னதாக தகவல்களை பொது வெளியில் கொண்டு செல்லக்கூடிய வலிமை மிக்க தளங்களாக முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
முன்னணி அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், இணைய தளங்கள் மேற்கண்ட தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை செய்திகளாக மறுபதிப்பு செய்கின்றன. இதன் காரணமாக சமூக வலைதளங்கள் செய்தி நிறுவனங்கள் போன்று தகவல் தொடர்பு சாதனங்களாக ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதன் காரணமாக மற்றவர்களை காட்டிலும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகிறது திரையுலகம். தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தொழில் ரீதியிலான போட்டியாளர்களை காலி செய்யவும் சமூகவலைதளங்களை கரன்சிகளை கொட்டி கொடுத்து வளர்த்தவர்கள் திரையுலகினர்.
தடுமாறும் தமிழ் திரைப்பட உலகம்!
விமர்சனம் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் டிவிட்டர் தளங்களில் தனி நபர்கள் கொடுக்கும் மதிப்பெண்களை பெருமையாக போஸ்டர் வெளியிட்டு கொண்டாடியதும் திரையுலகம்.
டிவிட்டர் இன்புளுயஸ்யர், வர்த்தக வல்லுனர்கள், சினிமா கிரிட்டிக் என அடைமொழியெல்லாம் கொடுத்து கொண்டாடியவர்கள் தமிழ் திரையுலகினர். இவை அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு விஸ்வரூபம் எடுத்து திரையுலகை அச்சுறுத்த தொடங்கியுள்ள சமூகவலைதள வியாபாரிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது என்பது தெரியாமல் தடுமாறுகிறது தமிழ் திரைப்பட உலகம்.
புதிய திரைப்படங்களையும், திரையுலக கலைஞர்களையும் தொடர்ந்து எதிர்மறையாக விமர்சித்து வரும் புளுசட்டை மாறன், திரைக்கலைஞர்களின் அந்தரங்க வாழ்க்கையை வலைதளங்களில் பேசுவதை வாடிக்கையாக செய்து வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஆகிய இருவரையும் புதியபட வெளியீட்டின் போது தயாரிப்பாளர்கள் செலவில் நடத்தப்படும் பத்திரிகையாளர் காட்சிக்கு தவறாமல் அழைப்பதை இன்று வரை தயாரிப்பாளர்களோ அல்லது தயாரிப்பாளர்கள் சங்கங்களோ புறக்கணிக்குமாறு சம்பந்தபட்ட செய்தி தொடர்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறது.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இரண்டும் திரையரங்க வளாகத்திற்குள் வீடியோ, பேட்டி எடுக்க அனுமதிக்க கூடாது என அறிக்கை வெளியிட்டனர்.
கங்குவாவுக்கு வந்த சோதனை!
சமூகவலைதளங்களின் எதிர்மறையான விமர்சனங்களால் கங்குவா திரைப்படம் தோல்வியை தழுவியது என்கிற பிம்பத்தை கட்டமைக்க சமூக வலைதளங்கள் முயற்சித்து வந்த சூழலில், அதற்கு வலிமை சேர்க்கும் வகையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை அமைந்தது என்பதை மறுக்க முடியாது.
கங்குவா படத்தின் வசூல் குறைவுக்கு காரணம் அப்படம் பற்றி படக்குழு ஏற்படுத்திய அதீதமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மையான காரணம் என்பதை படக்குழு இன்றுவரை சுயவிமர்சன பார்வையுடன் பார்க்க தவறி வருகிறது.
கங்குவா படத்தின் உண்மையான பட்ஜெட்டிற்கு உரிய வியாபாரம் நடந்துள்ளது. திரையரங்குகளில் எதிர்பார்த்த அபரிமிதமான வசூல் இல்லை என்பது தான் கள நிலவரம்.
இந்த சூழலில் தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - மனைவி சைரா பானு திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனையொட்டி ரஹ்மான் சம்பந்தமாக பேட்டிகள், விமர்சனங்கள் யூடியூப்பில் வெளியானது. இதைப் பார்த்து ரஹ்மான் எந்தவொரு பதட்டமும் இன்றி ஒற்றை அறிவிப்பு மட்டும் தனது அட்வகேட் மூலம் வெளியிட்டார்.
தனது விவாகரத்து அறிவிப்பு தொடர்பாக அவதூறான வீடியோக்களை யூடியூபில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். தவறும் நிலையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
யூடியூபர்ஸுக்கு ரஹ்மான் வைத்த செக்!
அடுத்த 24 மணி நேரத்தில் ரஹ்மான் சம்பந்தபட்ட 700 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் யூடியூப் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தனி நபராக ரஹ்மான் ஒற்றை அறிக்கையில் சாதித்ததை அமைப்பாக இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏன் செய்ய முடியவில்லை என்பதே பெரும்பான்மையான தயாரிப்பாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
அதனால் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி. சிவலிங்கம் என்ற சிவா தாக்கல் செய்திருந்த மனுவில்,
“எங்களது சங்கம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக புதிதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் வெற்றிகரமான வெளியீட்டுக்கும், அதன் செலவினங்கள், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
சமீபகாலமாக புதிதாக வெளியாகும் திரைப்படங்களை யூடியூப், எக்ஸ் வலைதளப் பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு எதிர்மறையாக அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பிராட்காஸ்டிங் பீரோ போன்ற அமைப்புகளும், திரைப்படங்களை கண்காணித்து தணிக்கை செய்ய சென்சார் போர்டு போன்ற அமைப்புகளும் உள்ளன.
மூன்று நாட்களுக்கு விமர்சிக்க தடை!
இந்த எதிர்மறை விமர்சனங்கள் படம் பார்க்க செல்லும் ரசிகர்களின் மனநிலையை மாற்றி, பல திரைப்படங்களை தோல்வியடைய செய்கிறது. இதனால் பல கோடிகளை செலவிட்டு பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
தமிழ் திரைப்படத்துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே புதிதாக திரைப்படங்கள் வெளியாகும்போது அந்த படங்களைப்பற்றி முதல் மூன்று நாட்களுக்கு விமர்சிக்க தடை விதிக்க வேண்டும்.
அதேபோல புதிய திரைப்படங்கள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூடியூப், எக்ஸ் வலைதளப்பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, “பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்களை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்துக்களை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
இதனால் படங்களை பார்க்கச் செல்லும் மக்களின் மனநிலை மாறுகிறது. திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகை, இயக்குநர் குறித்தும் அவதூறு பரப்புகின்றனர். எனவே முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம். அதேநேரம் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது தனிமனித கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
சில திரைப்படங்களுக்கு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் வருகிறது. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும், யூடியூப் நிறுவனமும் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் மீது தாக்குதல்: 22 பேர் பலி!
Pushpa 2: ஆல் டைம் ரெக்கார்டு! ஓடிடி + ஹிந்தி உரிமை இத்தனை கோடியா?
Comments
Post a Comment