கமல்ஹாசனை நாயகனாகக் கொண்டு ‘விக்ரம்’ எனும் ப்ளாக்பஸ்டர் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரது மகள் ஸ்ருதிஹாசன் உடன் ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தில் நடித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் ஏராளம். ஆனால், அந்த ஆல்பம் பற்றிப் பேசுவதற்காக நேரில் சந்தித்தபோதுதான் ‘கூலி’ படத்தில் வரும் ஒரு பெண் பாத்திரத்தில் நீங்கள் நடிக்கத் தயாரா என்று ஸ்ருதியிடம் கேட்டிருக்கிறார் லோகேஷ்.
தன்னிடம் நேரடியாக ஒரு படத்தில் நடிப்பது பற்றி ஒரு இயக்குனரே நேரடியாகப் பேசியது வியப்பளித்ததாக முன்னர் கூறியிருந்தார் ஸ்ருதி.
சில மாதங்கள் கழித்து ‘ஸ்கிரிப்ட்’ பணிகள் நிறைவடைந்த பின்னர் சத்யராஜ் ஏற்ற ராஜசேகர் பாத்திரத்தின் மகளாக ‘ப்ரீத்தி’ எனும் பாத்திரத்தில் ஸ்ருதி நடிப்பதாக முடிவாகியிருக்கிறது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராக இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாதிரி ஒருவரைப் பார்த்ததில்லை எனும் தொனியில் பேசினார் ஸ்ருதிஹாசன். ‘கூலி’ படப்பிடிப்புத் தளத்தில் அவர் எப்படியிருந்தார் என்று கூறியிருக்கிறார்.
“செட்ல இருக்கறப்போ கத்துற இயக்குனர்களைப் பார்த்திருக்கேன். சில பேர் மைக்கை கூட உடைச்சிருக்காங்க. ஆனால் லோகேஷ் ரொம்பவே கூல். ரொம்ப அமைதியா இருப்பார். யாருடனும் அதிகம் பேச மாட்டார். அதேநேரத்துல நடிகர்கள்கிட்ட காட்சிக்கு என்ன தேவையோ அதை வாங்காமல் விட மாட்டார்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ருதி.

Comments
Post a Comment