இந்திய சினிமாவில் திரையரங்குகளில் படத்தை திரையிட்டு கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் சதவீதம் தனி திரையரங்குகள் மூலமே அதிகமாக இருக்கும். மல்டிபிளக்ஸ், மால் திரையரங்குகள் மூலம் குறைவான சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கும். இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தனி திரையரங்குகளின் வருவாய் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு முடிவு கட்டிய பெருமை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கே உரியது. திரையரங்கு தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்து நவீனப்படுத்திய போது அதனை ஆதரித்து, ஊக்குவித்தவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தான். புதிய படங்கள் வெளியாகும் போது மால் தியேட்டர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து அவர்களை தேடி சென்று படத்திற்கு திரைகள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைப்பார்கள். முன் தொகை இல்லை என்றாலும் பரவாயில்லை திரை ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற நிலையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் தனித் திரையரங்குகள் முன்தொகை கொடுத்து படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வருபவர்களை காக்க வைத்து அதிகபட்ட சதவீத பங்கு தொகை அடிப்படையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். ...