Skip to main content

பணம் தராமல் அலைக்கழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!

இந்திய சினிமாவில் திரையரங்குகளில் படத்தை திரையிட்டு கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் சதவீதம் தனி திரையரங்குகள் மூலமே அதிகமாக இருக்கும். மல்டிபிளக்ஸ், மால் திரையரங்குகள் மூலம் குறைவான சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கும்.

இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தனி திரையரங்குகளின் வருவாய் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு முடிவு கட்டிய பெருமை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கே உரியது.

திரையரங்கு தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்து நவீனப்படுத்திய போது அதனை ஆதரித்து, ஊக்குவித்தவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தான்.

புதிய படங்கள் வெளியாகும் போது மால் தியேட்டர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து அவர்களை தேடி சென்று படத்திற்கு திரைகள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைப்பார்கள்.

முன் தொகை இல்லை என்றாலும் பரவாயில்லை திரை ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற நிலையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் தனித் திரையரங்குகள் முன்தொகை கொடுத்து படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வருபவர்களை காக்க வைத்து அதிகபட்ட சதவீத பங்கு தொகை அடிப்படையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள்.

எந்த கார்ப்பரேட் நிறுவன திரைகளை தயாரிப்பாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து, வளர்த்து விட்டார்களோ, அந்த நிறுவனங்கள் ஆக்டோபஸாக வளர்ந்து தற்போது விநியோகஸ்தர், தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறது.

மல்டிபிளக்ஸ் அரங்குகளை இந்தியா முழுவதும் நிறுவியுள்ள PVR நிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 105 திரைகளும் தமிழ்நாடு முழுக்க சுமார் 150 திரைகளும் இருக்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, சேலம் ஆகிய விநியோகப் பகுதிகளில் இந்நிறுவனத்தின் திரையரங்குகள் இருக்கின்றன.

PVR Sathyam Cinemas | Tamil Nadu Chennai | Hospitality and Entertainment Entertainment Theatre | Bharat Directory

சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை PVR நிறுவனம் கையகப்படுத்தி நடத்தி வருகிறது. திரையுலகம் இப்போது அந்நிறுவனத்துக்கெதிராக பேசத் தொடங்கியிருக்கிறது.

அதற்குக் காரணம், அந்நிறுவனம் நடத்தும் திரைகளில் திரையிடும் படங்களின் மூலம் வரக்கூடிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் விநியோகஸ்தர்களுக்கான பங்கு தொகை கொடுப்பதில் ஏற்படும் நீண்ட கால தாமதம்தான் காரணம் என்கின்றனர்.

இதே போன்ற நடைமுறையை அதிக வருவாய் வரக்கூடிய, முக்கியத்துவம் மிக்க தனி திரையரங்குகள் பத்தாண்டுகளுக்கு முன்பு செய்து வந்தன. அதனை விநியோகஸ்தர்கள் சங்கங்கங்கள் பஞ்சாயத்து பேசி ஒழுங்குபடுத்தினார்கள்.

ஆனால் PVR போன்ற நிறுவனங்கள் எதற்கும் கட்டுப்பட்டு வருவதாக தெரியவில்லை. ’எங்களை விட்டால் எங்கு படத்தை திரையிடுவீர்கள்?’ என எதிர் கேள்வி கேட்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இருவரையும் அச்சுறுத்தி வருகிறது என்கின்றனர்.

PVR ல் புதிய படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களுக்கான பங்குத் தொகையை கொடுக்க சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்கிறது அந்நிறுவனம். மாதத்தின் முதல் நாள் திரையிடப்படும் ஒரு படம் ஒரு மாதம் அல்லது ஐம்பது நாட்கள் திரையரங்கில் ஓடுகிறது.

அப்படம் ஓடி முடித்த பின்பு மொத்தமாக எவ்வளவு வசூல் அதில் விநியோகஸ்தரின் பங்கு எவ்வளவு என்பதைப் பிரித்து எழுதிக் கணக்குப் போட்டு தகவல் கூறிவிடுகின்றனர்.

அதன் பின்பு நிர்வாக நடைமுறை, காசோலை தயாரிப்பு, தலைமை அலுவலக அனுமதி என காரணம் கூறி இரண்டு வாரம் கழித்துப் பணம் கொடுத்து வந்தவர்கள் தற்போது அந்தக் கால எல்லையை நீட்டித்து இப்போது மூன்று மாதங்கள் கடந்த பின்னரே பங்கு தொகையை வழங்க தொடங்கியுள்ளனர்.

அதாவது படம் வெளியிட்ட பின் விநியோகஸ்தரின் பங்கு அவரிடம் சென்று சேர சுமார் ஐந்து மாதங்கள் ஆகின்றன என்கிறார்கள்.

அதேசமயம் தனித் திரையரங்கு முதலாளிகள் படம் போடுவதற்கு முன்பணம் கொடுக்கிறார்கள். படம் ஓடி முடிந்ததும் உடனே கணக்குக் கொடுத்துப் பணமும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் PVRபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் திரையிடும் எந்தப் படத்துக்கும் முன்பணம் கொடுப்பதில்லை.வருகிற வசூலையும் சுமார் ஐந்து மாத காலம் பயன்படுத்திக் கொள்கிறது.

வட்டிக்கு வாங்கி தொழில் செய்யும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளரும் இந்த ஐந்து மாதத்துக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய கொடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) சென்னையில் நடந்த நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழுவில் பிவிஆர் நிறுவனத்தின் இச்செயலுக்கு எதிராக போர்க்குரல்கள் எழுந்துள்ளன.

’தனித் திரையரங்குகளை அழித்து உருவாகும் இதுபோன்ற நிறுவனங்களை ஆதரித்த முன்னணி தயாரிப்பாளர்கள் இருப்பதை அழித்து பறக்க ஆசைப்பட்டதற்கான பலனை இப்போது அனுபவிக்கின்றோம்’ என்கின்றனர்.

இருந்தபோதிலும் PVR நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இராமானுஜம்

சரக்கு வேனில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை… ‘வாழை’ படத்தின் எதிரொலியா? நடந்தது என்ன?

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

பணம் தராமல் அலைகழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக ...