மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்பட்ட பாலியல் நெருக்கடி, குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு துணை நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக பேசிவருகின்றனர்.
பலர் ஹேமா கமிஷன் விசாரணை குழுவிடம் சம்பந்தபட்டவர்களின் பெயரை குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். நடிகைகள் கூறும் குற்றசாட்டுகளுக்கு சம்பந்தபட்டவர்கள் பதில் கூற தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் நடிகை மினு முனீர், மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
அதில், “கடந்த 2009ல் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர்தான் இந்த மினு முனீர். அப்போது மீனு குரியன் என்கிற பெயரில் தன்னுடைய புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்துடன் எனது வீட்டிற்கு வந்தார்.
எல்லா நடிகர்களையும் உற்சாகப்படுத்துவது போலவே அவரிடம் பேசி அனுப்பி வைத்தேன். நான் நடந்து கொண்ட விதத்திற்கு அவரே எனக்கு நன்றி தெரிவித்து மெசேஜ் அனுப்பினார்.
அந்த சமயத்தில் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதன் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து 2022-ல் அவரும் அவருடைய கணவரும் பண உதவி கேட்டு என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் கேட்ட தொகை மிகப்பெரியது என்பதால் என்னால் தர இயலவில்லை என்று கூறினேன்.
உடனே சிறிய தொகையாவது கொடுங்கள் என ஒரு லட்சம் கேட்டனர். இதனைத் தொடர்ந்து பலமுறை வாட்ஸ் அப் மூலமாக பணம் கேட்டு எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால் நான் தரவில்லை என்பதால் அவர் கணவர் மூலமாக நான் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி வெளியில் சொல்வதாக பிளாக்மெயில் செய்ய தொடங்கினார்.
அது பயனளிக்காததால் தற்போது என் மீது அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மற்றவர்கள் போல நான் வாய் மூடி மௌனமாக ஒதுங்கி செல்ல மாட்டேன். சட்டரீதியாக இதை எதிர்கொண்டு உண்மை என்ன என்பதை வெளியில் கொண்டு வருவேன்” என்று கூறியுள்ளார் முகேஷ்.
நடிகையின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
கேரள அரசு சார்பில் படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்ற வகையில் கொள்கை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்து முகேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொச்சியில் உள்ள போலீசார், முகேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது ஐபிசி பிரிவுகள் 354 (பெண்களை அவமதித்தல்), 454 (அத்துமீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
இராமானுஜம்
Comments
Post a Comment